மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்தில் அரிசி வழங்கப்படும் அமைச்சர் தகவல்


மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்தில் அரிசி வழங்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 4 May 2020 5:40 AM IST (Updated: 4 May 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சள் நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்தில் இலவச அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

பாகூர்,

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் ஊரடங்கால் பாதித்த முதியவர்களுக்கு சேதராப்பட்டில் உள்ள ஈட்டன் பவர் குவாலிட்டி நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சையது தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு 105 பேருக்கு 5 கிலோ அரிசி, முககவசம் ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிவப்புநிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு தற்போது இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனை கவர்னர் குறைகூறியுள்ளார். இந்த அரிசி தரமற்றது, அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும். மக்கள் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய்க்கு விலை போய்விடாதீர்கள் என கவர்னர் கூறி உள்ளார்.

ஏன் பரிசோதனை செய்யவில்லை

இந்த விஷயத்தில் கவர்னர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரிசி மத்திய அரசாங்கத்தின் குடோனில் இருந்து வருகிறது. மாநில அரசு வழங்கிய அரிசி, 10 முறை பரிசோதனை செய்து தான் வழங்க வேண்டும் என்றவர், தற்போது வழங்கப்படும் அரிசியை ஏன் பரிசோதனை செய்யவில்லை என நான் கேள்வி கேட்கிறேன்.

நாட்டில் பஞ்சம் வரும்போது வழங்குவதற்காக 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைத்திருந்த அரிசியை தான் மத்திய அரசு வழங்கி உள்ளது. அதுவும் சிவப்பு அட்டைக்கு தான் கொடுத்தார்கள். அடுத்த வாரம் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும். இதற்கும், கவர்னர் காலம் கடத்தி வருகிறார்.

ஒரு வாரத்தில் வழங்கப்படும்

சிவப்பு அட்டைதாரர் களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மூலமாக அரிசி வழங்கலாம் என கோப்புகளை அனுப்பினோம். அதற்கு, கவர்னர் ஒத்துக்கொள்ளவில்லை. முதல்-அமைச்சருக்கும், அமைச்சரான எனக்கும் கோப்பு அனுப்பாமல் நேரடியாக அரிசி வழங்க மாற்று ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக யாரையும் வேலைக்கு வைக்க முடியவில்லை. அரசின் திட்டங்களை போராடி தான் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வேலை வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி தரவில்லை. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.10 கோடி கொடுத்து தான் மத்திய அரசிடமிருந்து அரிசி வாங்க உள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி அந்தோணி மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்ல நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story