கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரியில் பறந்த போர் விமானங்கள்
கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் டாக்டர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரியில் போர் விமானங்கள் பறந்தன. அப்போது, பொதுமக்களும் கை தட்டி வரவேற்றனர்.
கன்னியாகுமரி,
கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் டாக்டர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரியில் போர் விமானங்கள் பறந்தன. அப்போது, பொதுமக்களும் கை தட்டி வரவேற்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போர்
கொரோனாவுக்கு எதிரான போரில், வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கள், நர்சுகள் மற்றும் தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் போர் வீரர்களாக திகழ்கிறார்கள். மக்களை காப்பதற்காக தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போர் வீரர்களை கவுரவிக்க, தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டு எல்லையை காக்கும் வீரர்கள் முடிவு செய்தனர். அதாவது, இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து சென்று டாக்டர்களுக்கு மரியாதை செலுத்தவும், அதே நேரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது கடற்படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவவும், கொரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்த கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
போர் விமானங்கள் பறந்தன
அதன்படி நேற்று கொரோனா போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அந்த டாக்டர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை 5.06 மணிக்கு கன்னியாகுமரிக்கு 2 போர் விமானங்கள் வந்தன. அந்த போர் விமானங்கள், இந்தியாவின் தென்கோடி எல்லையான முக்கடல் சங்கமிக்கும் கடல் பகுதியை வலம் வந்தன. இறுதியாக கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை வட்டமடித்தபடி 5.16 மணிக்கு பறந்து சென்றது. அந்த சமயத்தில், கடற்கரையில் சமூக இடைவெளியுடன் நின்றபடி விவேகானந்த கேந்திர செயலாளர் அனுமந்த்ராவ், கேந்திர ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர்.
அதே சமயத்தில், விமானம் பறந்த நேரத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘வைபா‘ கப்பல் விவேகானந்தர் மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், இரவு நேரத்தில் அந்த கப்பல் வண்ண விளக்குகளாலும் ஜொலித்தது.
Related Tags :
Next Story