வெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க நெல்லை மாநகர எல்லையில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
வெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க நெல்லை மாநகர எல்லையில் போலீசார் கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளனர்.
நெல்லை,
வெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க நெல்லை மாநகர எல்லையில் போலீசார் கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளனர்.
கண்காணிப்பு கோபுரம்
கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தபோதும், அனுமதியின்றி மாவட்டம் விட்டு மாவட்டம் வருவோரை கண்காணிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வருபவர்களை கண்காணிக்க நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள வாகனச்சோதனை சாவடியில், அதாவது நெல்லை மாநகர எல்லையில் போலீசார் தற்காலிக கண்காணிப்பு கோபுரத்தை அமைத்து உள்ளனர். மூங்கில் கம்புகளால் அந்த கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
திறப்பு விழா
இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், அந்த கண்காணிப்பு கோபுரத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனம் மூலம் நெல்லை மாநகர பகுதிக்குள் வந்து விடுகிறார்கள். வாகனத்துக்குள் உட்கார்ந்து இருப்பவர்களை சில நேரம் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளோம்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
இதன் மேலே ஏறி நின்று பார்த்தால், சரக்கு வாகனத்தில் யார் உட்கார்ந்து இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியும். மேலும் கீழே ஒரு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாகவும் கண்காணிக்கப்படும். இந்த வாகன சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
நெல்லை மாநகர எல்லையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. முதன்முறையாக தச்சநல்லூரில்தான் இது அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை சாலை வழியாக வெளிமாவட்டத்தினர் வருகிறார்கள் என்ற தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இங்கு அமைத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story