சமூகஇடைவெளியை கடைபிடிக்காத கடைகள் உடனடியாக மூடப்படும் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சமூகஇடைவெளியை கடைபிடிக்காத கடைகள் உடனடியாக மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை,
சமூகஇடைவெளியை கடைபிடிக்காத கடைகள் உடனடியாக மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனுமதி அட்டை
நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும், அத்தியாவசிய பொருட் கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களும், வங்கி நிர்வாகங்களும் கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளோடு கீழ்க்கண்டவற்றையும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காய்கறி, மளிகை பொருட்கள், பால், இறைச்சி ஆகியவற்றை வாங்கவரும் வாடிக்கையாளர்கள் மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ள வண்ண அனுமதி அட்டையை கொண்டு வந்திருப்பதை உறுதி செய்த பின்னரே பொருட்கள் வழங்க வேண்டும்.
கடை மூடப்படும்
வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் பொருட் கள் வாங்க வந்தால், அவர்களுக்கு முக கவசம் வழங்கி, அதற்கான பில்தொகையை, பொருட்கள் பில்லுடன் சேர்த்து வசூலிக்க வேண்டும். கடை முன்பாக வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை கண்காணிக்க வேண்டும்.
கடை முன்பு சமூக இடைவெளி பின்பற்றாமல் கும்பலாகவோ, கூட்டமாகவோ நின்றால் சம்பந்தப்பட்ட கடை உடனடியாக மூடப்படுவதோடு, உரிமம் மற்றும் அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும். உணவகங்களில் தயார் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்களை பொட்டலமாக வழங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கண்காணிப்பதோடு, அவ்வப்போது வங்கியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அனுமதியின்றி பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும், வார்டுக்கு 2 தன்னார்வலர்கள் வீதம் 55 வார்டுகளுக்கும் 110 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் பற்றியும், பிற புகார்களுக்கும் மாநகராட்சி இலவச தொலைபேசி எண் 1800 425 4656 எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து களப்பணியாளர்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story