வேட்டையாட சென்றவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்து வனக்காவலர் படுகாயம் வாலிபர் கைது


வேட்டையாட சென்றவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்து வனக்காவலர் படுகாயம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 May 2020 8:23 AM IST (Updated: 4 May 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பச்சைமலையில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றவரை விரட்டியபோது, நாட்டு துப்பாக்கி வெடித்ததில் கழுத்தில் குண்டு பாய்ந்து வனக்காவலர் படுகாயம் அடைந்தார்.

உப்பிலியபுரம், 

திருச்சி பச்சைமலையில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றவரை விரட்டியபோது, நாட்டு துப்பாக்கி வெடித்ததில் கழுத்தில் குண்டு பாய்ந்து வனக்காவலர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வன விலங்குகள் வேட்டை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்றவற்றை தடுக்கும் பொருட்டு துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று சாராய ஊறலை அழித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பச்சைமலை பகுதியில் ஒருவர் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட செல்வதாக வன ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில், வனக்காப்பாளர் ரஞ்சித்குமார், வனக்காவலர்கள் குமார், வீரபாண்டியன் உள்ளிட்ட 6 பேர் பச்சைமலை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, டாப்செங்காட்டுப் பட்டியை அடுத்துள்ள பூதக்கால் வனப்பகுதியில் சுந்தரம் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 27) என்பவர் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தார். வன ஊழியர்களை பார்த்ததும் அவர் தப்பி ஓடினார். அவரை வன ஊழியர்கள் விரட்டிச் சென்றனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்தது

அப்போது பயந்து போன முத்துகிருஷ்ணன், கையில் இருந்த துப்பாக்கியை தூக்கி எறிந்து விட்டு ஓடினார். அப்போது கீழே விழுந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி அருகிலிருந்த வனக்காவலர் வீரபாண்டியன் (31) கழுத்தில் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மற்ற வன ஊழியர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, வனச்சரகர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பட்டதாரி வாலிபர் கைது

இதுதொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றதும், அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு எவ்வித உரிமமும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. அதன்பேரில், அவர் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் பி.எஸ்சி பட்டதாரி ஆவார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பச்சைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story