பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 9:27 AM IST (Updated: 4 May 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி, 

பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜி கார்னர் காய்கறி மார்க்கெட்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக, பால்பண்ணை அருகே சர்வீஸ் சாலையில் காய்கறிகள் மொத்த வியாபாரம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு காய்கறி வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் தற்போது பொன்மலை ஜி கார்னர் மைதானத்துக்கு காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் முக கவசம் அணிந்தும், காய்கறிகள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை வியாபாரிகள் முறையாக கடைபிடிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காய்கறி வியாபாரிகள், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருடனான அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்குவது நிறுத்தப்படுகிறது என்றும், சில்லரை வியாபாரிகள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மட்டும் மொத்த வியாபாரிகள் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது என்றும் முடிவு செய்துள்ளனர். இந்த நடைமுறை நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்தது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வியாபாரிகள் மீது நடவடிக்கை

பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை போன்ற மாநகரில் காய்கறி சந்தையில் கூட்டம் அதிகமாகவும், விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்த காரணத்தாலும் பல்வேறு நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் காய்கறி மார்க்கெட்டில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், தனிப்பட்ட நுகர்வோருக்கு (பொதுமக்கள்) சில்லரை வியாபாரம் செய்யமாட்டோம் என காய்கறிகள் வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதை மீறி செயல்படும் மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், காய்கறி மார்க்கெட்டின் இயக்கத்தை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story