ஊரடங்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை ஒப்பந்ததாரர்களுக்கு, போலீசார் எச்சரிக்கை


ஊரடங்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை ஒப்பந்ததாரர்களுக்கு, போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 9:35 AM IST (Updated: 4 May 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு உரிமையாளர்களிடம் வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது பொதுமக்கள் பால், காய்கறி, மளிகைப்பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு வெளியே செல்லும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பலர் இதனை பின்பற்றாமல் மோட்டார் சைக்கிள், கார்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 4,500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட காலியாக காணப்பட்ட பள்ளி மைதானம், தியேட்டர் வளாகம், கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைத்தனர்.

ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை 1,400 வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடத்தில் போலீசாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்கள் எடுக்கும்போது வாடகை வசூலிப்பதாகவும், சில இடங்களில் கூடுதல் வாடகை கட்டணம் கேட்பதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர்கள் வாகன உரிமையாளர்களிடம் வாடகை வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “வாகன நிறுத்தும் இடங்களில் வாடகை வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசினோம். அப்போது பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுக்கும்போது வாடகை வசூலிக்க கூடாது. வாகன உரிமையாளர்களிடம் சாவியை ஒப்படைக்கும்போது கார் நிறுத்தும் இடத்திற்கு வாடகை செலுத்த வேண்டாம் என்று சொல்லி அனுப்புவோம். அதையும் மீறி வாடகை வசூலிப்பது தெரிய வந்தால் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

Next Story