அன்றாடச் செலவுகளை சமாளிக்க கரூரில், முக கவசம் விற்பனையில் களமிறங்கிய தொழிலாளர்கள்
கரூரில், அன்றாடச் செலவுகளை சமாளிக்க முக கவச விற்பனையில் தொழிலாளர்கள் பலர் களமிறங்கி விட்டனர்.
கரூர்,
கரூரில், அன்றாடச் செலவுகளை சமாளிக்க முக கவச விற்பனையில் தொழிலாளர்கள் பலர் களமிறங்கி விட்டனர்.
முக கவசம் விற்பனை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பலர் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதில் கூலித்தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் பலரது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
இந்தநிலையில் வயிற்று பிழைப்புக்காக சிலர் முக கவச விற்பனையில் களமிறங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்ள வழிமுறைகளில் முக கவசம் அணிவதும் ஒன்றாகும். முன்பு மருந்துகடைகளில் மட்டுமே விற்று வந்த முக கவசத்தை, தேவை அதிகரித்த பின் சிலர் அதனை வாங்கி சாலையோரம் விற்க தொடங்கினர். மகளிர் சுய உதவிக்குழுவினரும் வீடுகளில் முக கவசங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனால் முக கவசம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கூலி தொழிலாளர்கள்
கரூர் தாந்தோணிமலை, காந்திகிராமம், வெங்கமேடு, வடிவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் முக கவசம் விற்று வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, முக கவசம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிலர் இதை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்று வந்தனர். தற்போது சாலையோரங்களில் முக கவசம் ரூ.8 முதல் ரூ.15 வரை தரத்திற்கு ஏற்றாற்போல் பல வடிவங்களில் விற்கப்படுகிறது. இந்த விற்பனையில் ஈடுபட்டுள்ள பலரும் கூலி தொழிலாளர்கள் ஆவர்.
இதுகுறித்து முக கவசம் விற்கும் ஒருவர் கூறியதாவது:- நான் ஊரடங்குக்கு முன்பு, தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்ற வந்தேன். ஊரடங்கால், அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டதால், வருமானத்திற்கு வழியில்லாமல் போனது. குடும்பத்தை நடத்துவதற்கும், அன்றாடச் செலவுக்குமே கையில் பணம் இல்லாமல் போனது. இதனால் வீட்டில் உள்ள தையல் எந்திரம் மூலம், துணிகளை கொண்டு முக கவசம் தயாரித்து சாலையோரங்களில் விற்பனை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு, அன்றாடச் செலவுகளை சமாளிக்க வேண்டி உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story