கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 4 May 2020 7:01 AM GMT (Updated: 4 May 2020 7:01 AM GMT)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

அரியலூர், 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் லாரிகளில் வந்தனர். அவர்களை ஆங்காங்கே சோதனை சாவடிகளில் போலீசார் பிடித்து விசாரணை செய்து கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று அறிவித்து, அந்த பகுதிகளுக்கு நுழையும் முக்கிய சாலைகளில் கம்புகளை கொண்டு தடுப்புகளை அமைத்து தடுத்து, அதில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகை வைத்தனர். இதையடுத்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் ரத்னா மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார். அதன்படி நேற்று அரியலூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

வாகனங்கள் பறிமுதல்

இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தின் அனைத்து எல்லை பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தினர் அரியலூர் மாவட்டத்தின் உள்ளே வராமல் தடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியே செல்லாமல் அவர் களையும் தடுத்தனர்.

இதில் தேவையில்லாமல் இரு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும் போலீசார் ஹெலி கேமராவை பறக்கவிட்டு கண்காணித்தனர்.

வெறிச்சோடி காணப்பட்டது

மேலும் முழு ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் அரியலூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், செந்துறை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வீட்டில் முடங்கிய பொதுமக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி தாயம், சீட்டு, கேரம் போர்டு உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர். முழு ஊரடங்கில் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, மளிகை கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்ததால், காய்கறிகள் மட்டும் சரக்கு வேனில் ஆங்காங்கே விற்கப்பட்டது. அதனை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி சென்றனர். இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

Next Story