சென்னிமலை பகுதியில் யூ-டியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சும் கும்பல் - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்


சென்னிமலை பகுதியில் யூ-டியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சும் கும்பல் - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 5 May 2020 4:00 AM IST (Updated: 4 May 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை பகுதியில் யூ-டியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சும் கும்பல் தலையெடுத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னிமலை, 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பல ஊர்களில் குடிசை தொழில் போல் சாராயம் காய்ச்ச தொடங்கிவிட்டனர். இதற்காக வேல மரங்களின் பட்டைகளை உரித்து எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் வெள்ளோடு பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் ஓரத்தில் நூற்றுக்கணக்கான வேல மரங்கள் உள்ளன. இங்கு சாராயம் காய்ச்சுவதற்காக சிலர் பட்டைகளை உரித்து எடுத்து சென்றுள்ளனர். இதனை ஈரோடு மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து கள்ள சாராயம் காய்ச்சியதாக பலரை கைது செய்துள்ளனர். எனினும் வேல மரங்களில் பட்டை உரித்து வருவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

கீழ்பவானி வாய்க்கால் பகுதி மட்டுமின்றி, தோட்டங்களில் உள்ள வேல மரங்களிலும் சாராயம் காய்ச்சும் கும்பல் பட்டைகளை உரித்து எடுத்துச்சென்றுள்ளது. சமீபத்தில் சென்னிமலை பகுதியில் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தும் ஒருவரிடம் ஒரு நபர் சென்று, எங்கள் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பெரிய அளவிலான குக்கர் வேண்டும் என கேட்டுள்ளார். கடைக்காரரும் பெரிய அளவிலான குக்கரை கொடுத்துள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து குக்கருடன் திரும்ப வந்து அதற்கான வாடகையையும் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

அவர் சென்றபிறகு குக்கரை சுத்தம் செய்வதற்காக கடைக்காரர் திறந்து பார்த்த போது அதில் வேல மரத்து பட்டையை சாராயம் காய்ச்சுவதற்காக குக்கரில் வேக வைத்ததும், குக்கர் முழுவதும் வேலம்பட்டை வாசத்துடன் நிறம் மாறி இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போல பல சம்பவங்கள் சென்னிமலை பகுதியில் நடந்து வருகிறது. இதில், பல பேர் யூ-டியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இரவு, பகலாக மதுவிலக்கு போலீசார் கிராமப்புறங்களில் தீவிரமாக கண்காணித்து வருவதால் சாராயம் காய்ச்சுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Next Story