சூளகிரியைச் சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று


சூளகிரியைச் சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 May 2020 10:15 PM GMT (Updated: 2020-05-05T01:16:29+05:30)

சூளகிரியைச் சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த 2 பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று நேற்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பெண்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்பப்பட்டன.

இந்த பரிசோதனையின் முடிவில், அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி முழுவதையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த 2 பெண்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர். அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து தனிமைப் படுத்தப்பட்டு உள்ளன.

அந்த பகுதியைச் சுற்றி உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தொற்று வந்துள்ள 2 பெண்களில் ஒருவர், சமீபத்தில் ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்று வந்ததாகவும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story