நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்
கொள்முதல் செய்த கரும்புக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் விவசாயிகள், தாங்கள் விளைவித்த சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள கரும்புகளை தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் இயங்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு ரூ.20 கோடி மதிப்புள்ள கரும்பை அனுப்பி உள்ளனர். கரும்பை பெற்றுக் கொண்ட ஆலை நிர்வாகம் இது வரை அதற்கான பணத்தை வழங்கவில்லை. இதையடுத்து ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் சாலையில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நாங்கள் விளைவித்த கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சர்க்கரை ஆலையை கண்டித்து பல முறை போராட்டம் நடத்தியும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டும், கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆலை நிர்வாகம் இது வரை பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது ஊரடங்கு காரணமாக விவசாயிகள் மிகப்பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், நிலுவையில் உள்ள பணம் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சருக்கு மின் அஞ்சல் மூலம் மனு அனுப்பியும் பதில் இல்லை. எனவே போராட்டம் செய்வது என முடிவு எடுத்து போராடி வருகிறோம். எனவே எங்களின் நிலை அறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story