சேலத்தில் ஓட்டல்கள், கடைகள் திறப்பு: வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


சேலத்தில் ஓட்டல்கள், கடைகள் திறப்பு: வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 5 May 2020 4:45 AM IST (Updated: 5 May 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் சேலத்தில் வழக்கம்போல் ஓட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேலம்,

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும் குறையாததால் 3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஓட்டல்கள், கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடை, பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், செல்போன் கடைகள் என சுமார் 70 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் வீடுகளில் இருந்து வெளியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். சாலையில் வாகனங்களின் பெருக்கமும் அதிகமாக இருந்தது.



 சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு செல்போன் கடையில் மொபைல் போன் சர்வீஸ் செய்ய சமூக இடைவெளியுடன் அமர்ந்து இருக்கும் பொதுமக்கள்.



மேலும் சேலத்தில் நேற்று காலை வழக்கம்போல் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டிடம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்டு, சானிட்டரி வேர் என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் வழக்கம்போல் காணப்பட்டது.



 சேலம் செவ்வாய்பேட்டையில் கட்டிட பணிக்கு தேவையான உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.





இதுமட்டுமின்றி சுயதொழில் செய்யும் நபர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து புறப்பட்டு தங்களது கடைகளுக்கு சென்றனர். ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களாக வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்கள் நேற்று முதல் வெளியே வழக்கம்போல் சுற்றித் திரிந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், 5 ரோடு, 4 ரோடு, புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வாகனங்கள் அணி வகுத்து சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

செவ்வாய்பேட்டையில் நேற்று அனைத்து கடைகளும் திறந்து வழக்கம்போல் வியாபாரம் நடைபெற்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளி கடை பிடித்து மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். ஜவுளிக்கடை, நகைக்கடை, சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம், டீக்கடை ஆகியவை இயங்க அனுமதி வழங்கப்படாததால் அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடைவீதி மற்றும் சின்னக்கடை வீதியில் உள்ள சிறிய ஜவுளி கடைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் இந்த கடைகள் அனைத்தும் திறக்கப்படாததால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.



 சேலம் அஸ்தம்பட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த காட்சி.


அதேநேரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் எதுவும் செயல்படவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருப்பதால் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றவேண்டும் என்றும், அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆத்தூர்

இதே போல ஆத்தூர், நரசிங்கபுரம், கருப்பூர், தாரமங்கலம், மேட்டூர், ஓமலூர், மேச்சேரி, சங்ககிரி, வாழப்பாடி, தலைவாசல், ஆட்டையாம்பட்டி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.


Next Story