கோவையில் காலையில் திறக்கப்பட்ட கடைகள் ஒரு மணி நேரத்தில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு வியாபாரிகள் அதிர்ச்சி


கோவையில் காலையில் திறக்கப்பட்ட கடைகள் ஒரு மணி நேரத்தில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு வியாபாரிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 May 2020 3:58 AM IST (Updated: 5 May 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காலையில் திறக்கப்பட்ட கடைகள் ஒரு மணி நேரத்தில் போலீசார் மூடச்சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக்கல், ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின்மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் நேற்று (4-ந் தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.

கடைகள் திறப்பு

இதையடுத்து கோவையில் கடந்த 40 நாட்களாக பூட்டிக்கிடந்த தனிக்கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் கடைகளை காலை 10 மணிக்கு திறந்தனர். இதற்காக கடைகளை சுத்தப்படுத்துவதற்காக ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். அரசின் விதிமுறைகளின்படி குறைந்த ஆட்களை கொண்டு கடைகளை சுத்தப்படுத்திய பின்னர் கடைகள் திறக்கப்பட்டன.

கோவை டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, வெறைட்டிஹால் ரோடு, மில்ரோடு, கிராஸ்கட்ரோடு, 100 அடி ரோடு, ஆர்.எஸ்.புரம், திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, அவினாசி ரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் திறக்கப்பட்டன. சாதாரண செருப்பு கடைகள் முதல் செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் ஷோரூம்கள் திறக்கப்பட்டன. இதேபோல் புறநகர் பகுதிகளான துடியலூர், சூலூர், வடவள்ளி பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.

கடைகளை அடைத்த போலீசார்

இந்த நிலையில் முறையான விதிமுறைகள் நாளை (புதன்கிழமை) முதல் விதிக்கப்பட உள்ளதால், கடைகளை அடைக்குமாறு அந்தந்த பகுதி போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதையடுத்து கடைகள் திறந்த ஒரு மணி நேரத்தில் அடைக்கப்பட்டன. கடைகளை திறக்கலாம் என்ற ஆர்வத்தில் வந்த வியாபாரிகள் போலீசார் வந்து நெருக்கடி கொடுத்ததால் கடைகளை அவர்கள் அடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

கொரோனா தாக்கத்தால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. அரசு அறிவித்ததால் தான் நாங்கள் கடைகளை திறந்தோம். ஆனால் உடனே போலீசார் வந்து கடைகளை மூடச் சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்களாக கடைகளை திறக்கவில்லையே. அரசு கூறியதால் தான் நாங்கள் கடைகளை திறந்தோம்.

ஆனால் கடைகளில் சமூக இடைவெளி இல்லை. குளு குளு கடைகளை திறக்க அனுமதி இல்லை. கடைகளை திறப்பதற்கு எங்களுக்கு உத்தரவு வரவில்லை. கலெக்டர் மதியம் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். அதன்பின்னர் திறந்துகெள்ளுங்கள் என்று போலீசார் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி எங்களை அலைக்கழித்து விட்டனர்.

மரியாதை குறைவான பேச்சுகள்

சில இடங்களில் போலீசார் மரியாதைக்குறைவான வார்த்தைகளில் பேசிய சம்பவங்களும் நடந்துள்ளன. நாங்களாக கடைகளை திறக்கவில்லை. அரசு கடையை திறக்க சொன்னது. அதன்படி நாங்கள் கடைகளை திறந்தோம். அதற்காக எங்களை மரியாதை குறைவாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.இது எதை காட்டுகிறது என்றால் தெளிவான உத்தரவு இல்லாமல் மாவட்ட நிர்வாகம் செயல்படுவது தெரிகிறது. போலீசாரை கேட்டால் கடைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தான் மூடச் சொன்னார்கள் என்று சொன்னார்கள். சில இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சொன்னார்கள் என்று சொன்னார்கள். மொத்தத்தில் இது ஒட்டு மொத்த குழப்பத்தைத்தான் காட்டுகிறது.

கடைகளில் சமூக இடைவெளி இல்லை என்று போலீசார் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஹார்டுவேர், எலக்டிரானிக்ஸ் கடைகள் கறிக்கடைகள் இல்லை. அந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க ஒன்றிரண்டு பேர் தான் வருவார்கள். அப்படி இருக்கையில் சமூக இடைவெளி பிரச்சினை எங்கிருந்து வந்தது?.

கடைகளை திறந்ததால் தான் கூட்டம் வருகிறது என்று போலீசார் சொன்னார்கள். அப்படி எந்த கடைகளிலும் முண்டியடித்துக்கொண்டு கூட்டம் வரவில்லை. சாலைகளில் வேண்டுமென்றால் வாகனங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்திருக்கும். அவர்கள் அனைவரும் கடைக்கு தான் வருகிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும். இனியாவது தெளிவான வந்த பின்னர் அதன்படி நடந்தால் யாருக்கும் எந்த சிரமமும் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் கோவையில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி அனைத்து வர்த்தகர்களும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நாளை முதல் திறக்க அனுமதி

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாளை (புதன்கிழமை) முதல் கோவை மாவட்டத்தில் தனிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட உள்ளது. குளிர்சாதனம் (ஏ.சி.) பயன்படுத்தும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். என்றனர்.

கோவையில் தனிக்கடைகள் காலையில் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story