கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு ‘சீல்’


கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 5 May 2020 4:11 AM IST (Updated: 5 May 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

கோவை,

கோவை சாய்பாபாகாலனி அருகே உள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்த 62 வயது முதியவர், 43 வயது பெண் மற்றும் 10 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதேபோல் வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த 31 வயது பெண்ணுக் கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் கள் 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

‘சீல்’ வைப்பு

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வேலாண்டிபாளையம் மற்றும் வெங்கிட்டாபுரம் பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அந்த பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லவோ அல்லது வெளி நபர்கள் இந்த பகுதிக்குள் செல்லவோ அனுமதிக்கப்பட வில்லை. மேலும் வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதுடன், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோரின் சளி, ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story