ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு: கூடலூரில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு


ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு: கூடலூரில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 4:32 AM IST (Updated: 5 May 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடு களில் தளர்வு செய்யப் பட்டதால், கூடலூரில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.

கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் கொண்டு வரப்பட்டன. அதை காரணம் காட்டி கூடலூரில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டு இருந்தது. மேலும் வாகன போக்குவரத்தும் அதிகரித்தது. ஆட்டோக்கள், ஜீப்புகள், தனியார் வாகனங்கள் அதிகளவில் சாலைகளில் செல்வதை காண முடிந்தது.

கூடலூரில் இருந்து கோழிக்கோடு மற்றும் மைசூரூ செல்லும் சாலைகளின் இருபுறமும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர் நின்று வாகன ஓட்டிகளை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறியவாறு அங்கிருந்து சென்றனர். இதனால் செய்வதறியாது போலீசார் திகைத்தனர். இன்னும் பலர் சாலைகளில் சுற்றித்திரிந்தவாறு இருந்தனர்.

வாக்குவாதம்

இதேபோன்று ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிகளவு வெளியே வந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி சென்றனர். சில ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்தனர். கூடலூர் அருகே சூண்டி ரேஷன் கடையில் வழக்கமாக வழங்கும் அரிசி அளவை விட 4 கிலோ குறைவாக வழங்குவதாக கூறி பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.இதுகுறித்து வட்ட வழங்கல் துறையினரிடம் கேட்டபோது, வழக்கமாக வழங்கும் அளவை விட 4 கிலோ அரிசி குறைவாக வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வழக்கமாக வழங்கும் அளவில் அரிசி வழங்கப்படுகிறது என்றனர்.

Next Story