முக கவசம் அணிவது கட்டாயம்: கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி கலெக்டர் அறிவிப்பு


முக கவசம் அணிவது கட்டாயம்: கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 5:04 AM IST (Updated: 5 May 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கலாம் என்றும், பொதுமக்களும், கடைகளில் பணியாற்றுவோரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வியாபார கடைகள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது வியாபார கடைகளை திறப்பது, சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்படலாம். இதுதவிர கட்டுமான பணிகளுடன் தொடர்புடைய ஹார்டுவேர், சிமெண்டு, இரும்பு, எலக்ட்ரிக்கல், பெயிண்ட் மற்றும் மரக்கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அடகுகடைகள், ஒர்க்‌ஷாப்புகள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள், ஜெராக்ஸ் கடைகள், மிக்சி, கிரைண்டர் மற்றும் குக்கர் பழுதுநீக்கும் கடைகள், விவசாயம் சார்ந்த மோட்டார் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், செல்போன் பழுதுநீக்கும் கடைகளும் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கிடையாது. மேலும் அனைத்து பகுதிகளிலும் கட்டுமான பணிகள், சாலை பணிகள் மேற்கொள்ளலாம். சரக்குகளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஏற்றி, இறக்கலாம். அதேபோல் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள், எலக்ட்ரிக்கல், பிளம்பர், ஏ.சி. மெக்கானிக், தச்சர்கள் கலெக்டரிடம் முன் அனுமதி பெற்று வேலை செய்யலாம். சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் முக கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி பணிபுரியலாம். ஆனால், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், டயாலிசிஸ், இதய நோயாளிகளை பணிக்கு நியமிக்க கூடாது.

தொழிற்சாலைகள்

நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் உள்பட அனைத்து வகை தொழிற்சாலைகளை திறப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் அத்தியாவசிய பொருட்களை தவிர இதர நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (புதன்கிழமை) முதல் இயங்கலாம். மீறினால் நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். 

Next Story