கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது: மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள் திறப்பு - மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது


கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது: மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள் திறப்பு - மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது
x
தினத்தந்தி 4 May 2020 11:36 PM GMT (Updated: 2020-05-05T05:06:28+05:30)

கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மதுக் கடைகள், வணிக-தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டன. சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருந்தது. இதன் மூலம் கர்நாடகத்தில் இயல்புநிலை திரும்புகிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.

40 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு 4-ந் தேதி(நேற்று) முதல் ஊரடங்கு தளர்த்தப் படுவதாக கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று பெங்களூருவில் தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சில்லரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. சாலைகளில் தனியார் வாகனங்கள் அதிகளவில் இயங்கின. பஸ்கள் ஓடாததால், வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் சாலைகளில் நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

சில தனியார் நிறுவனங்கள் தங்களின் வாகனம் மூலம் ஊழியர்களை அழைத்து சென்றன. பெங்களூருவில் சில ரோடுகளில் வாகன நெரிசல் உண்டானது. ஊரடங்கு காரணமாக குறைந்து இருந்த மக்கள் நடமாட்டமும் நேற்று சற்று அதிகரித்து இருந்தது. பெங்களூருவில் சிக்பேட்டை ஒரு வணிக பகுதியாகும். இங்கு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இங்கு ஜவுளி, எழுது பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அதிக அளவில் வியாபாரிகள் வந்து பொருட்களை கொள்முதல் செய்து செல்வார்கள். அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக குறைந்திருந்தது. இதுகுறித்து ஜெயின் சர்வதேச வணிக அமைப்பின் இணை செயலாளர் சஜ்ஜன்ராஜ் கூறுகையில், “பஸ், மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப் படாததால், இங்கு கூட்டம் குறைவாக உள்ளது. தற்போது வியாபாரிகளுக்கு இடையே வர்த்தகம் நடக்கிறது.” என்றார்.

மதுக்கடைகள் திறப்பு

மாநிலம் முழுவதும் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுபான கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.(இதுபற்றிய விரிவான செய்தி 9-ம் பக்கம்)

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள், ஆட்டோ-வாடகை கார்கள் இயங்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் சாலைகளில் ஓடவில்லை. நகரில் சுமார் 10 ஆயிரம் சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மூடப்பட்ட அந்த சாலைகளை போலீசார் திறக்கவில்லை.

இதனால் வேலைக்கு செல்பவர்கள், சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் மூடப்பட்டுள்ள சாலைகளை திறக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயல்புநிலைக்கு திரும்புகிறது

மாநிலத்தில் சிவமொக்கா, சிக்கமகளூரு, கோலார் உள்ளிட்ட பசுமை மண்டலத்தில் அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. அரசு அலுவலகங்கள் இயங்கின. இதில் 33 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அதிகாரிகள் மட்டத்தில் 100 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர். சொந்த வாகனம் இல்லாத அரசு ஊழியர்கள் விதான சவுதா பணிக்கு வர பி.எம்.டி.சி. பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய இருக்கை மற்றும் மேசைகள் இடைவெளிவிட்டு போடப்பட்டிருந்தன. தனியார் அலுவலகங்களும் திறக்கப்பட்டிருந்தன. இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகளும் திறக்கப்பட்டன. மொத்தத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்க்கை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Next Story