திருவாரூர் மாவட்டத்தில் மின் சாதன கடைகளை திறக்க அனுமதி கலெக்டர் ஆனந்த் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் ஹார்டுவேர், மின் சாதன கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது என கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் ஹார்டுவேர், மின் சாதன கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது என கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது மக்களின் அத்தியாவசிய பணிகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளோடு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். நகர்புற மற்றும் கிராம பகுதிகளில் கட்டுமான பணிகள் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, மின் சாதனங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
தடை இல்லை
செங்கல், எம்-சாண்ட் எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை. செல்போன், கணினி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார்களை பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்ட தனிக்கடைகளும் செயல்படும். இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கடைகளில் கட்டாயம் அனைத்து கதவுகளும் திறந்து வைத்திருக்க வேண்டும்.
கட்டுமான பணிகளுக்கு தேவையான செங்கல் சூளைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. நோய் தடுப்பு பகுதிகளில் இந்த தளர்வுகள் பொருந்தாது. வணிக வளாகங்கள், டீக்கடை, சலூன், அழகு நிலையம், மசாஜ் சென்டர், கார் விற்பனை நிலையம், இரு சக்கர வாகன விற்பனை நிலையம், நகைக்கடைகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஜவுளிக்கடைகள் இயங்கவும், டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஓடவும் அனுமதி இல்லை.
முக கவசம்
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தனிக்கடைகளில் ஊழியர்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடைக்கு வருபவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தனி பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிருமி நாசினி திரவம் வைக்கப்பட வேண்டும். இதனை மீறி இயங்கும் கடைகள் ‘சீல்’ வைக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story