தொழில் துறையினர் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் - கலெக்டர் அறிவிப்பு


தொழில் துறையினர் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 5:51 AM IST (Updated: 5 May 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(புதன்கிழமை) முதல் தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் திறப்பது தொடர்பாக தொழில்துறையினருடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொழில்துறையினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை நாளை(புதன்கிழமை) மீண்டும் திறக்கும்போது அரசின் வழிகாட்டுதல் நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் யாரையும் பணியில் அமர்த்தக்கூடாது. தினமும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பது குறித்து அறிக்கை பெற்று அதை நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் நுழைவுவாசலில் அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைக்க வேண்டும்.

டாக்டர்களால் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லாதவர்களை பணியில் சேர்க்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் பணிக்கு வருவோர், பணியில் இருந்து செல்வோர் ஆகியோருக்கு தனித்தனி வழி அமைக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு நுழையும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு சளி,இருமல், காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவர்களை 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். 55 வயது கடந்த பணியாளர்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய பணியாளர்கள் இருந்தால் அவர்களை நன்கு பரிசோதனை செய்த பிறகே பணிக்கு அமர்த்தலாம். அவர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தலாம். அதுபோன்ற பணியாளர்களை பிறருடன் கலந்து இருக்க அனுமதிக்க கூடாது.

பணிக்கு வரும் தொழிலாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அதுபோல் நிறுவனத்தின் அடையாள அட்டையை அணியவேண்டும். 200 பணியாளர்கள் கொண்ட நிறுவனத்தில் அழைத்தால் உடனடியாக வரும் வகையில் ஒரு டாக்டரை நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும். 200 முதல் 1,000 பேர் வேலை செய்யும் தொழில் நிறுவனங்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை டாக்டரை கொண்டு தீவிர பரிசோதனை செய்ய வேண்டும்.

1,000 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனத்தில் தினமும் மருத்துவ பரிசோதனை செய்யும் வகையிலும், அருகில் உள்ள மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்கவும் செய்ய வேண்டும்.

பணியாளர்களை வெளியில் இருந்து அழைத்து வந்தால் வாகனத்தில் 50 சதவீத இருக்கை மட்டுமே வைத்து சமூக இடைவெளி விட்டு அமர வைத்து இயக்க வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். காரில் டிரைவருடன் 2 பேரும், இருசக்கர வாகனத்தில் ஒருவரும் வர அனுமதிக்க வேண்டும்.

தொழில் நிறுவனத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்துக்கும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். நிறுவனத்தை 2 நாட்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு காலையும், மாலையும் சுத்தம் செய்ய வேண்டும். சிற்றுண்டி வளாகம், கூட்டரங்கு, கழிப்பிடம், ஓய்வு அறைகளை அவ்வப்போது தெளிப்பான் கருவி மூலமாக சுத்தம் செய்ய வேண்டும்.

லிப்ட்டில் 4 பேர் செல்லவேண்டும். தொழில் நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை காவலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். நிறுவனத்துக்குள் தங்கியிருப்பவர்கள் இரவு விடுதிக்கு செல்லும் முன் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு படுக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். ஷிப்டு முறையில் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் பணி முடிந்து 30 நிமிடம் கழித்தே அடுத்த பணியாளர்கள் வர அனுமதிக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்து கொடுக்க வேண்டும். கொரோனா பற்றிய விழிப்புணர்வை தொழிலாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தேவையற்ற நபர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை விதியின் கீழ் தண்டனை வழங்கப்படும். இந்த நிபந்தனைகளை பின்பற்றுவதாக தவறான தகவல்கள் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்களின் பயன்படுத்தப்பட்ட முககவசங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களும் இதுபோன்ற விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது மற்றும் தொழில்துறையினர்கலந்து கொண்டனர்.

Next Story