41 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறையில், பெரும்பாலான கடைகள் திறப்பு சமூக விலகலை கடைபிடிக்காமல் திரண்ட பொதுமக்கள்
மயிலாடுதுறையில் 41 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் திரண்டனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறையில் 41 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் திரண்டனர்.
அறிவிப்பு வெளியிடவில்லை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து தொடர் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்ற வகையில் ஊரடங்கு நடைமுறையில் தளர்வுகள் குறித்து அந்தந்த மாநில முதல்-அமைச்சர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவித்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகளை அனுமதிப்பதாக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார். இதனையடுத்து சில மாவட்டங்களில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால் நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர் பிரவீன் நாயர், தளர்வுகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
போக்குவரத்து நெரிசல்
இந்த நிலையில் கடந்த 41 நாட்களுக்கு பிறகு நேற்று மயிலாடுதுறை நகரில் ஜவுளிக்கடைகள், நகை கடைகள், சலூன் கடைகள், இன்னும் சில வர்த்தக நிறுவனங்களை தவிர்த்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க திரண்டனர். அப்போது பெரும்பாலான பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் சமூக விலகலை கடைபிடிக்காமலும், முக கவசம் இன்றியும் கூட்டம், கூட்டமாக சென்றனர். மேலும் கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகமாக சென்றதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று அதிகமாகி விடுமோ? என சமூக ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story