ஊரடங்கு தளர்வு எதிரொலி: ராமநாதபுரத்தில் திருவிழா போன்று திரண்ட கூட்டம்
ஊரடங்கு தளர்வு எதிரொலியாக ராமநாதபுரத்தில் திருவிழா போன்று கூட்டம் திரண்டது. சமூக இடைவெளி காணாமல் போனது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அறிவிப்பின்படி தளர்வு அறிவிக்கப்பட்ட கடைகள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன. குறிப்பாக மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் நேற்று காலை ஏராளமான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ராமநாத புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வந்தனர். இதன்காரணமாக ராமநாத புரம் நகரில் பெரிய கடைவீதி பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் திருவிழா கூட்டம்போல காணப்பட்டன. ஒரு சில கடைகள் தளர்வு அளிக்கப்படாத நிலையிலும் திறக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. பொருட்கள் வாங்க வந்த பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முண்டியடித்துக்கொண்டு கடைத்தெருக்களில் நுழைந்து செல்வதை காண முடிந்தது.
இதுநாள்வரை வீடுகளுக்குள் இருந்து நோய் பரவாமல் ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் தளர்வு அளிக்கப்பட்டதும் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முண்டியடித்து சென்றுவந்ததை காணும்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட் நிலவரத்தை போன்று மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இனி கடைகள் திறக்கப்படாது என்பதை போன்று திறக்கும்போதே தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் விரைந்து சென்று கூட்டத்தை கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். வருவாய்த்துறையினர் ஜீப்பில் ஒலிபெருக்கி மூலம் திரளாக வந்த மக்களை எச்சரித்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் தங்களுக்கு அதை பற்றிய கவலை இல்லை என்ற எண்ணத்தில் மக்கள் சென்றதை பார்க்கும் போது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
Related Tags :
Next Story