வேலூர் மாநகராட்சியில் நாளை முதல் எந்தெந்த கடைகள் திறந்திருக்கும்? முழு விவரம் அறிவிப்பு


வேலூர் மாநகராட்சியில் நாளை முதல் எந்தெந்த கடைகள் திறந்திருக்கும்? முழு விவரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 1:00 AM GMT (Updated: 2020-05-05T06:30:16+05:30)

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் எந்தெந்த கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முழு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள், அனைத்து மத வழிபாட்டு தலங்கள், சலூன் கடைகள், அழகுநிலையங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுகூடங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை திறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

பஸ், கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்காது. டீ, காபி கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சி, இறுதி ஊர்வலத்தில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

வேலூர் மாநகராட்சி வார்டு எண்- 16 மற்றும் 25 முதல் 41 வரையும், 49 முதல் 60 வரையும் தற்போது காணப்படும் நடைமுறையே பின்பற்றப்படும். ஏற்கனவே அமலில் உள்ள அனைத்து கட்டுபாடுகளும் தொடரும். இவற்றை தவிர வேலூர் மாநகராட்சியில் உள்ள மற்ற 30 வார்டுகளில் இயங்க அனுமதி அளிக்கப்படும் கடைகள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நேர விவரம் வருமாறு:-

மளிகை கடைகள் 4 நாட்கள் திறக்கலாம்

பால், காய்கறி, பேக்கரி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரையும், மளிகைக்கடைகள் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரையும் திறக்கலாம். மீன், இறைச்சி கடைகள் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுமக்களிடம் செல்போன் மூலம் ஆர்டர் பெற்று, வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய வேண்டும். கடையில் விற்பனை செய்யக்கூடாது. சூப்பர்மாக்கெட் மூலம் வீடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்ய மட்டுமே அனுமதி. தனியார் கட்டுமான பணிகளில் பணியிடங்களில் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யலாம். அச்சகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.

கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமான பொருட்கள், சானிடரிவேர் மின்சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 5 மணிவரை திறக்க லாம். ஒருநபர் மட்டுமே நடத்தும் செல்போன் கடைகள், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின்மோட்டார் ரிப்பேர், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட ஒருநபர் மட்டுமே நடத்தும் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இயங்கலாம். இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையம், உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம்.

அனுமதிசீட்டு...

ஓட்டல்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் வழங்க அனுமதி. ஓட்டல்களில் டீ, காபி, குளிர்பானங்கள் குடிக்க அனுமதி கிடையாது. பீடி சுற்றும் தொழில், அகர்பத்தி, தீப்பட்டி, சோப்பு தொழில், கைத்தறி உள்ளிட்ட அனைத்து குடிசை தொழில்களும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் நாளை முதல் (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது.

ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் காட்பாடி சிட்கோ தொழிற்பூங்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம். இதுதொடர்பாக கலெக்டரிடம் எழுத்துபூர்வமாக அனுமதி பெற வேண்டும். பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோர் அப்பகுதி தாசில்தாரிடம் அனும தி சீட்டு பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Next Story