ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கும் மையம்
வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் சளி மாதிரி சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆரல்வாய்மொழி,
வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் சளி மாதிரி சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு மற்றும் மணிக்கட்டி பொட்டல் அனந்த சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 3 பேருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
இந்த நிலையில் குலசேகரம் பகுதியை சேர்ந்த நர்சு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகர்கோவிலுக்கு படையெடுப்பு
தற்போது சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக குமரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் மட்டும் 250 பேர் வந்தனர்.
இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் அனுமதி பெற்றும், அனுமதி இல்லாமலும் வருகிறார்கள். அவ்வாறு வாகனத்தில் வருபவர்கள் ஆரல்வாய்மொழியில் உள்ள சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
மையம்
பின்னர் வாகனத்தில் வந்தவர்களை இறச்சகுளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா அறிகுறி உள்ளதா? என்று கண்டறிய பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு சளி மாதிரி சேகரிக்கப்படுபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தி கொள்ளும்படி கூறி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்க வசதியாக, சோதனை சாவடி அருகில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் புதிதாக மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு வாகனத்தில் குமரி மாவட்டத்துக்கு வருபவர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வு
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று சளி மாதிரி சேகரிக்கும் மையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் அங்கு இருந்தவர்களிடம் சளி மாதிரி சேகரிப்பு குறித்த விவரங்கள் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story