ஊரடங்கு தளர்வால் இயல்புநிலை திரும்பியது: நெல்லையில் கடைகள் திறப்பு; மக்கள் கூட்டம் அலைமோதியது


ஊரடங்கு தளர்வால் இயல்புநிலை திரும்பியது: நெல்லையில் கடைகள் திறப்பு; மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 5 May 2020 2:52 AM GMT (Updated: 2020-05-05T08:22:50+05:30)

நெல்லையில் ஊரடங்கு தளர்வால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் ஊரடங்கு தளர்வால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊரடங்கு தளர்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, கடைகளை திறக்கவும், சுய தொழில்களை செய்யவும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்திலும் ஊரடங்கை தளர்த்தி கடைகளை திறக்க கலெக்டர் ஷில்பா அனுமதி வழங்கினார்.

அதன்படி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை டவுன் ரதவீதியில் உள்ள சிறிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, தெற்கு பஜார், மகாராஜ நகர், புதிய பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் திறந்து இருந்தன.

வியாபாரம் தொடங்கினர்

40 நாட்களாக கடைகள் திறக்கப்படாமல் மூடிக்கிடந்ததால் நேற்று ஊழியர்கள் கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு பூஜை செய்து வியாபாரத்தை தொடங்கினர். ஊரடங்கு தளர்வால் பொதுமக்களும் ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். அவர்கள் கடைகளுக்கு படையெடுத்து சென்று, தங்களுக்கு தேவையான புத்தாடைகள், தங்க நகைகளை வாங்கினார்கள்.

ஹார்டுவேர்ஸ், சிமெண்டு கடைகளும் திறக்கப்பட்டன. அங்கு கட்டுமான பணிக்கு தேவையான சிமெண்டு, இரும்பு கம்பிகள், குழாய்கள், மின்சார வயரிங் சாமான்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்றோர் தங்களது வேலைக்கு தேவையான சாமான்களை வாங்கிச் சென்றார்கள்.

மக்கள் கூட்டம் அலைமோதியது

இதனால் டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையோர கரும்பு சாறு கடைகள், தள்ளுவண்டி கடைகளையும் வியாபாரிகள் திறந்தனர். அவற்றை சுத்தப்படுத்தி வியாபாரத்தை தொடங்கினர்.

ஒருசில டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும், அங்கு மொத்தமாக தயார் செய்திருந்த டீ மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஓட்டல்களில் வழக்கம் போல் பார்சல் மட்டும் வழங்கினர். அல்வா உள்ளிட்ட மிட்டாய் கடைகளின் தயாரிப்பு குடோன்களுக்கும் நேற்று ஊழியர்கள் வேலைக்கு வந்திருந்தனர். அவர்கள் குடோனை சுத்தப்படுத்தி தயாரிப்பு பணிக்கு தயார் செய்தனர்.

இயல்பு வாழ்க்கை திரும்பியது

மளிகை கடைகள், காய்கறி கடைகளும் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை திறந்து வைக்கப்பட்டன. ஆனால், வெயிலின் தாக்கத்தாலும், கொரோனா தடை பழக்கத்தாலும் பொதுமக்கள் காலை நேரத்தில் மட்டும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச்சென்றனர்.

இதனால் நெல்லையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. போலீசார் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை கண்காணித்தனர். நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் வடக்கு பகுதி ரோட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்க, பள்ளம் தோண்டி மண் நிரப்பப்பட்டு இருந்தது. அங்கு பொக்லைன் மூலம் மணலை சமப்படுத்தும் பணி நடந்தது. இதனால் ஒருவழிப்பாதை இல்லாமல் தெற்கு பகுதி ரோட்டில் வாகனங்கள் எதிரெதிரே சென்று வந்தன. அந்த ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Next Story