ஊரடங்கால் வறுமையில் வாடும் ஒலிப்பெருக்கி தொழிலாளர்கள் பந்தல் அலங்காரமும் மாயமானது
கொரோனா ஊரடங்கால் ஒலிப்பெருக்கி தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். பந்தல் அலங்காரமும் மாயமாகிப் போனது.
திசையன்விளை,
கொரோனா ஊரடங்கால் ஒலிப்பெருக்கி தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். பந்தல் அலங்காரமும் மாயமாகிப் போனது.
ஒலிப்பெருக்கி
பழங்காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் தங்களிடையே தகவல் பரிமாற்றத்துக்காகவும், ஆபத்தான விலங்குகளிடம் இருந்து காத்து கொள்வதற்காகவும் முரசு, பறை ஒலியை எழுப்பினர். பின்னர் எதிரி நாட்டின் போர் அச்சுறுத்தலை எச்சரிப்பதற்கு முரசையும், கலாசார பண்பாட்டு இசையை இசைப்பதற்கு பறையையும் பயன்படுத்தினர். அறிவியலின் வளர்ச்சியாக வானொலியும், ஒலிப்பெருக்கியும் கண்டுபிடித்த பின்னர் மக்களிடையே தகவல் பரிமாற்றம் வேகமெடுத்தது.
அனைத்து வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழா, புதுமனை புகுவிழா போன்ற அனைத்து விழாக்களிலும் முதலிடம் பிடிப்பது ஒலிப்பெருக்கியே. விழாவையொட்டி ஒலிப்பெருக்கியில் இசைக்கப்படும் பாடல்களால் அந்த பகுதியே கோலாகலமாகிறது. மேலும் விழா நடைபெறும் இடங்களில் இரவை பகலாக்கும் வகையில், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வது அனைவரையும் வெகுவாக கவருகிறது. விழாக்களில் பிரமாண்டமான முறையில் ஒலிப்பெருக்கிகள் அமைப்பதையும், ராட்சத அலங்கார மின்விளக்குகள் அமைப்பதையும் தங்களது அந்தஸ்தாக கருதும் நிலை உள்ளது.
அதேபோன்று பிரமாண்டமான முறையில் பந்தல் மேடை அலங்காரங்களும் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் விழாக்கள், மின்னொலியில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள், கச்சேரிகளிலும் ஒலிப்பெருக்கி மற்றும் அலங்கார மின்விளக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது.
வறுமையில் வாடும் தொழிலாளர்கள்
அனைத்து ஊர்களிலும் ஒலிப்பெருக்கிகள், வண்ண அலங்கார விளக்குகள், பந்தல் மேடை அமைக்கும் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இந்த தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோவில் கொடை விழாக்கள் அதிகளவில் நடைபெறும். இதன்மூலம் ஒலிப்பெருக்கி, அலங்கார மின்விளக்கு, பந்தல் மேடை அமைக்கும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகாவில் அம்பை, ஊர்காடு, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பள்ளக்கால் பொதுக்குடி, முக்கூடல், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் அலங்கார மேடை அமைக்கும் தொழிலில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் பல்வேறு ஊர்களில் நடைபெறும் விழாக்களுக்கு சென்று பந்தல் மேடை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோன்று திசையன்விளை பகுதியிலும் ஒலிப்பெருக்கி, வண்ண அலங்கார மின்விளக்குகள், பந்தல் மேடை அமைக்கும் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஊரடங்கு காரணமாக, ஒலிபெருக்கிகள் ஒலிக்க மறந்து விட்டன. பந்தல் அலங்காரம் மாயமாகிப் போனது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் வாடுகின்றனர்.
நலவாரியம்
இதுகுறித்து திசையன்விளையைச் சேர்ந்த பந்தல் அலங்கார நலச்சங்க தலைவர் பொன்ராஜ் கூறியதாவது:-
ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக எந்தவொரு விழாக்களும் நடைபெறாததால், வருமானமின்றி தவித்து வருகிறோம். ஒலிப்பெருக்கி, பந்தல் மேடை அலங்கார தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வறுமையில் வாடுகின்றனர்.
எனினும் வேலை இல்லாத நாட்களில் அலங்கார மின்விளக்குகள், ஒலிப்பெருக்கி கருவிகள், பந்தல் மேடை பொருட்களை பராமரித்து பழுது நீக்கி வருகிறோம். விரைவில் கொரோனா வைரசை முற்றிலும் ஒழித்து ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம். எனவே, வறுமையில் வாடும் ஒலிப்பெருக்கி, பந்தல் மேடை தொழிலாளர்களுக்கு அரசு நலவாரியம் அமைத்து, நிவாரண உதவி, வட்டியில்லாத கடன் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story