ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்ட கடைகளில் குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் அடைக்கப்பட்டன


ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்ட கடைகளில் குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் அடைக்கப்பட்டன
x
தினத்தந்தி 5 May 2020 5:32 AM GMT (Updated: 2020-05-05T11:02:30+05:30)

ஊரடங்கு தளர்வால் கரூரில் திறக்கப்பட்ட கடைகளில் பொதுமக்கள் குவிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் அடைக்கப்பட்டன.

கரூர், 

ஊரடங்கு தளர்வால் கரூரில் திறக்கப்பட்ட கடைகளில் பொதுமக்கள் குவிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் அடைக்கப்பட்டன.

ஊரடங்கு தளர்வு

கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ், ரெயில் போக்குவரத்து தவிர சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் இந்த தளர்வு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று காலை கரூர் ஜவகர்பஜார், கோவை ரோட்டில் உள்ள செல்போன் சர்வீஸ் கடைகள், காலனி கடைகள், புத்தக நிலையம், மாவுக்கடைகள், சிறிய அளவிலான துணி கடைகள், சில்வர் பாத்திரக்கடைகள், பர்னிச்சர் கடைகள், கவரிங் நகைக்கடைகள், தையல் கடைகள், இரண்டு சக்கரவாகனம் பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டது. இதனால் சாலைகளில் எங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும், தனியார் செல்போன் நிறுவனங்களில் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு இன்றி கூட்டமாக நின்றதை காண முடிந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் சமூக விலகலை கடை பிடிக்க வலியுறுத்தி நகர போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி சென்றனர். இருப்பினும் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கடைகளையும் அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் திறந்த சில மணி நேரங்களிலேயே கடைகள் அடைக்கப்பட்டதால் கோவை ரோடு, ஜவகர்பஜார், செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று மதியம் 1 மணிக்கு மூடப்பட்டது.

குளித்தலை

குளித்தலை பகுதியில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. அரசு அறிவித்தபடி ஹார்டுவேர், கட்டுமான பொருட்கள், மின்சாதன விற்பனை, செல்போன், மின் மோட்டார் ரிப்பேர், செருப்பு, கடிகாரம் போன்ற கடைகள், பேன்சி ஸ்டோர், மோட்டார் சைக்கிள், கார் பழுதுபார்க்கும் கடைகள் உள்பட 95 சதவீத கடைகள் நேற்று திறக்கப்பட்டிருந்தன.

கட்டுமான பணிக்கு தேவையான செங்கல், ஜல்லி, இரும்பு கம்பிகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை மக்களின் நடமாட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் நேற்று புற்றில் இருந்து கிளம்பிய ஈசலை போல பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைக்காக கடைகளுக்கு சென்று வந்தனர். அதை பார்க்கும் போது ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்டுவிட்டதை போன்று இருந்தது. பொதுமக்கள் பலர் முககவசம் அணியவும் இல்லை, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இல்லை.

ஊரகப்பகுதியில்...

இதேபோல வெள்ளியணை, புலியூர், மாயனூர் தரகம்பட்டி, நச்சலூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, தோகைமலை ஆகிய பகுதிகளிலும் உள்ள சில கடைகள் காலை திறக்கப்பட்டு, மதியத்திற்கு பிறகு அடைக்கப்பட்டது. தரகம்பட்டியில் காலை திறக்கப்பட்ட கடைகள் மாலை 5 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டது.

Next Story