கரூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நாளை முதல் இயங்கலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர் மாவட்டத்தில், நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில், நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின், ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளதால், எந்தெந்த துறைகளுக்கு தடை உத்தரவில் இருந்து தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர் சங்கம், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பஸ் கட்டுமானம், சிறு, குறு தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) நகரப்பகுதிகளில் இருக்கக்கூடிய வர்த்தக நிறுவனங்கள், உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் 30 சதவீத ஊழியர்களுடனும், ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடனும் இயங்கப்பட அனுமதி அளிக்கப்படும். பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொழிற்சாலைக்கு வரும் அனைவருக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும், முக கவசம் வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலைக்குள் கண்டிப்பாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும். ஊழியர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தங்கள் பஸ்களில் அழைத்துவரவேண்டும். பஸ்களில் அழைத்து வரும்போதும் சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும். 50 வயதிற்கு மேற்பட்ட நபர்களை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் மாலை 6 மணி வரைதான் செயல்பட வேண்டும்.
அனுமதி பெற வேண்டும்
அனைவருக்கும் அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, மருந்துகடைகள், காய்கறி விற்பனை, மளிகைப்பொருட்கள் விற்பனையில் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும். வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான அனுமதி பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி, கொசுவலை உற்பத்தி, பஸ் கட்டுமானம் உள்பட அனைத்து தொழிற்சாலைகளும் குறைந்த அளவிலான வேலையாட்களை வைத்து இயக்கப்பட வேண்டும். நகைக்கடை, துணிக்கடை, முடிதிருத்தகம், டீக்கடை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஷோரூம் உள்ளிட்டவைகள் நடத்த அனுமதி இல்லை.
உணவகங்களில் பார்சல் மட்டும்
பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி.மெக்கானிக் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே பணிபுரிய அனுமதிக்கப்படுவர். கட்டுமானப்பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமான பொருட்கள், மின்சாதன விற்பனைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கணிப்பொறி, கண்கண்ணாடி, மின்மோட்டார் பழுது நீக்குதல், வாகனங்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மேற்சொன்ன தளர்வுகள் பொருந்தாது. அங்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடரும். அரசுத்துறைகளின் கட்டுமானப்பணிகள், சாலைப்பணிகள் அனுமதிக்கப்படும். நகர்ப்புறத்தில் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் கட்டுமானப்பணிகள் அனுமதிக்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள மால்கள், வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை. அரசின் உத்தரவினை முழுமையாகப் பின்பற்றாமல் தொழிற்சாலைகள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை பூட்டி சீல் வைக்கப்படும். எனவே, அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், அரசின் விதிகளை முழுமையாகப் பின்பற்றி சமூக விலகலை கடைபிடித்து தொழிற்சாலைகளை இயக்கி, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூரை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மருத்துவப்பணிகளுக்கான இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு.செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story