சளி, காய்ச்சல் உள்ளதா? கொரோனா பாதித்த பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுப்பு


சளி, காய்ச்சல் உள்ளதா? கொரோனா பாதித்த பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 5 May 2020 12:26 PM IST (Updated: 5 May 2020 12:26 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக கணக்கெடுத்து வருகின்றனர்.

பெரம்பலூர், 

கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக கணக்கெடுத்து வருகின்றனர்.

சளி, காய்ச்சல் உள்ளதா?

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் அதனை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் நேற்று காலையிலேயே சுகாதாரத்துறையினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று யாருக்கேனும் தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளதா? வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பி வந்துள்ளனரா? என்பது குறித்து கணக்கெடுத்தனர். அந்த பகுதிகளை தொடர்ந்து 14 நாட்களுக்கு சுகாதாரத்துறையினர் கண்காணிக்க உள்ளனர். தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று அறிவித்து, அந்த பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து தடுத்து, அதில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 49 பேரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, அவர்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூரில் 36, அரியலூரில் 52

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே மொத்தம் 11 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது மேலும் 25 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே மொத்தம் 28 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 24 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

Next Story