நாமக்கல்லில் இருந்து வந்த டிரைவருக்கு கொரோனா: ஆலங்குளத்தில் இன்றும், நாளையும் முழுஊரடங்கு
நாமக்கல்லில் இருந்து ஆலங்குளத்துக்கு வந்த டிரைவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆலங்குளத்தில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலங்குளம்,
நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி புதூரை சேர்ந்த 42 வயது லாரி டிரைவர், தீப்பெட்டி லோடு ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் கோண்டியா என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு தீப்பெட்டி பண்டல்களை இறக்கி விட்டு, பீடி இலை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்துக்கு வந்தார். நாமக்கல்லுக்கு வந்த வழியில் சேலம் மல்லூர் என்ற இடத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பிறகு நேற்று முன்தினம் ஆலங்குளம் வந்தடைந்த அவர் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் பீடி இலையை இறக்கிவிட்டு லாரியிலேயே தங்கினார். இதனிடையே, கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
இதையடுத்து அவரை நாமக்கல் சுகாதார துறையினர் தொடர்பு கொண்டபோது, ஆலங்குளத்தில் தான் இருப்பதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆலங்குளம் சுகாதார துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே ஆலங்குளம் சுகாதார ஆய்வாளர் கங்காதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாஹிர் உசேன், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ உள்ளிட்ட அதிகாரிகள், அந்த லாரி டிரைவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அதிகாரிகள் தொடர்பு கொண்டு சுமார் 2 மணி நேரம் கழித்த பிறகே ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. இதனால் அதிகாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
கொரோனா பாதித்த லாரி டிரைவர், பீடி இலை குடோனில் சுற்றித்திரிந்து உள்ளார். மேலும் பீடி இலையை இறக்கிய தொழிலாளிகள், கணக்காளர் ஆகியோரிடமும் பேசி இருக்கிறார். இதையடுத்து ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 3 பேரையும், பரும்பு நகர், அம்பை ரோட்டை சேர்ந்த தலா ஒருவரையும் சுகாதார துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். மேலும் லாரி டிரைவர் வேறு யாரையாவது தொடர்பு கொண்டாரா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு
இதற்கிடையே, ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தாசில்தார் பட்டமுத்து தெரிவித்து உள்ளார். மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story