டாஸ்மாக் கடைக்கு ‘குடை பிடித்து வந்தால்தான் மதுபானம் கிடைக்கும்’ - திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


டாஸ்மாக் கடைக்கு ‘குடை பிடித்து வந்தால்தான் மதுபானம் கிடைக்கும்’ - திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 5:45 AM IST (Updated: 6 May 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சில கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் நாளை முதல் திறக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக பராமரிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு கடையிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணிக்கு அமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூகஇடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தவறாமல் குடையுடன் வந்து, குடை பிடித்து நின்று மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்படாது.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தனிநபர் சுத்தம் பேணப்படுவதோடு டாஸ்மாக் கடை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முககவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மதுபான கூடங்கள் திறக்க அனுமதி இல்லை.

டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தினசரி மார்க்கெட், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சந்தர்ப்பத்தில் தவறாமல் குடையுடன் வர வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் முககவசம் அணிந்து அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீதிக்கு வர வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story