மாவட்டத்தில் துணி, நகை, செல்போன் கடைகள் திறக்க அனுமதி இல்லை: கலெக்டர் ராமன் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் துணி, நகை, செல்போன், எலக்ட்ரிக்கல் போன்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் அனைத்து வித கடைகள் மற்றும் இதர நிறுவனங்களை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி கலெக்டர் ராமன் பேசும் போது கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் அரசு உத்தரவு படி வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். எனவே மாவட்டத்தில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், பர்னிச்சர் விற்பனை கடைகள் மற்றும் குளிர்சாதன வசதிகள் உடைய அனைத்து வகையான கடைகள், தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள், குளிரூட்டப்பட்ட காட்சி அறைகள், திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் உள்ளிட்டவைகள் வருகிற 17-ந் தேதி வரை திறக்க அனுமதி இல்லை.
அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் மதுபான கடைகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் விதிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது.
சேலம் செவ்வாய்பேட்டை, லீபஜாரில் உள்ள கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து விதிகளையும் பின்பற்றி 1 நாள் வலதுபுறம் உள்ள கடைகளும், மறுநாள் இடதுபுறம் உள்ள கடைகளும் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இக்கடைகளில் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களை வேலைகளில் பயன்படுத்த கூடாது, கடைகளுக்கு வரும் பொதுமக்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள் ஜோதி அரசன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story