திருத்தணியில் தாயை இழந்த மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
திருத்தணியில் தாயை இழந்த மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
திருத்தணி,
திருத்தணியில் உள்ள சுப்புராய மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தி (வயது 55). இவரது மகள்கள் வனிதா (15), கிரிஜா (12). இவர்களில் வனிதா திருத்தணியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், கிரிஜா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜெயகாந்தியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி மற்றும் 2 மகள்களையும் விட்டு விட்டு எங்கேயோ சென்று விட்டார்.
இந்த நிலையில் மனம் தளராத ஜெயகாந்தி திருத்தணியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து மகள்களை படிக்க வைத்தார். இந்த நிலையில் ஜெயகாந்தி 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். தாயை இழந்த வனிதா, கிரிஜாவுக்கு அவர்களது வீட்டின் அருகில் உள்ளவர்கள் ஆறுதல் கூறி ஜெயகாந்திக்கு தங்கள் சொந்த செலவிலேயே ஈமச்சடங்குகள் நடத்தினார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதை அறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று திருத்தணிக்கு சென்று வனிதா, கிரிஜாவை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு சார்பில் 25 கிலோ அரிசி, பருப்பு, துணிகள் போன்றவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது:-
தாயை இழந்து வாடும் வனிதா, கிரிஜா இருவரும் திருவள்ளூரில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து படிக்கவும், உயர் கல்வி பயிலவும் தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். அப்போது அவருடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில், திருத்தணி ஆர்.டி.ஓ.சொர்ணம் அமுதா, தாசில்தார் உமா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story