செஞ்சி அருகே முன்விரோத தகராறில் பயங்கரம் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை விவசாயி கைது


செஞ்சி அருகே முன்விரோத தகராறில் பயங்கரம் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை விவசாயி கைது
x
தினத்தந்தி 6 May 2020 3:29 AM IST (Updated: 6 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே முன்விரோத தகராறில் 2 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன்கள் முத்துக்கிருஷ்ணன்(வயது 47), ஏழுமலை(42). விவசாயிகளான இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தை 2 ஆக பாகம் பிரித்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் விளை நிலத்தை பிரித்தது தொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

ஏழுமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்திருந்தார். இதையடுத்து அவர் நெல் அறுவடை செய்யப்பட்ட வயலில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளை வேறு இடத்துக்கு மாற்றி வைப்பதற்காக நேற்று காலை தனது மைத்துனரான அதே ஊரை சேர்ந்த முருகன்(40) என்பவரை அழைத்துக் கொண்டு முத்துக்கிருஷ்ணன் வயல் வழியாக ஒரு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

கத்திக்குத்து

இதைபார்த்த முத்துக்கிருஷ்ணன் ஏன் எனது வயல் வழியாக டிராக்டரில் செல்கிறாய்? என ஏழுமலையை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துக்கிருஷ்ணன் செல்போன் மூலம் தனது மகன் தங்கமணியை தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த தங்கமணி தனது தந்தையுடன் சேர்ந்து கொண்டு ஏழுமலையிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த முத்துக்கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏழுமலையின் மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தினார். இதை தடுக்க முயன்ற முருகனையும் முத்துக்கிருஷ்ணன், தங்கமணி ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதில் ஏழுமலை, முருகன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏழுமலை, முருகன் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

வலைவீச்சு

இதனிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், அனந்தபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தங்கதுரை ஆகியோர் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பி ஓடிய முத்துக்கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள தங்கமணியை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலையுண்ட ஏழுமலைக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளார்கள் என்பதும், முருகனுக்கு வேண்டாம் என்ற மனைவி மட்டும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்விரோத தகராறில் தம்பியை, அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story