கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2020 3:38 AM IST (Updated: 6 May 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

மயிலம்,

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நேருஜி சாலை, எம்.ஜி. சாலை மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பாதிராப்புலியூர், ரெட்டணை, ஆசூர் ஆகிய கிராமங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் ஒலிபெருக்கி மூலம் தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளவும், அச்சமின்றி இருக்கவும், வெளியில் எங்கும் செல்லாமல் உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ளும்படியும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

விழிப்புணர்வு

மேலும் அத்தியாவசிய பொருட்கள் என்னென்ன வேண்டுமோ அதை தெரிவித்தால் உடனுக்குடன் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் உள்ள போலீசார், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மூலம் உதவி மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட கடைவீதி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டாம் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படியும் ஒலிப்பெருக்கி மூலம் கலெக்டர் அண்ணாதுரை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சிவகுமார் மற்றும் மயிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளா வாசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story