சமூக விலகலை கடைபிடிக்காததால் அனுமதி மறுப்பு: கடைகளை திறக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றம்


சமூக விலகலை கடைபிடிக்காததால் அனுமதி மறுப்பு: கடைகளை திறக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 5 May 2020 10:27 PM GMT (Updated: 5 May 2020 10:27 PM GMT)

சமூக விலகலை கடைபிடிக்காததால் தஞ்சை பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை.

தஞ்சாவூர்,

சமூக விலகலை கடைபிடிக்காததால் தஞ்சை பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் கடைகளை திறக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

சமூக விலகல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஷாப்பிங்மால் உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற கடைகளை திறக்க சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. மேலும் கடைகளில் கைகழுவும் வசதி மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

கடைகள் திறக்க அனுமதி மறுப்பு

அதன்படி தஞ்சையில் நேற்று முன்தினம் பல கடைகள் திறக்கப்பட்டன. பர்மாபஜார், கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. பர்மாபஜார் பகுதிகளில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகள் அதிகமாக இருப்பதால் மக்கள் அங்கு கூடினர். மேலும் அங்கிருந்த கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை விரட்டினர். இதையடுத்து அதிகாரிகள் நேற்று காலையிலேயே பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கடைகளை திறக்க அனுமதி மறுத்தனர். மேலும் அரசு அறிவிப்பின்படி தான் கடைகளை திறக்க வேண்டும். இன்று கடைகளை திறக்கக்கூடாது என்று போலீசார் கூறினர்.

காத்திருந்தனர்

இதையடுத்து கடைகளை திறப்பதற்காக வந்திருந்த ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளின் முன்பு வெகுநேரமாக காத்திருந்தனர். மேலும் கடைகள் திறக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக போலீசாரும் அவ்வப்போது ரோந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதையடுத்து கடைகளை திறப்பதற்காக வந்த ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று (புதன்கிழமை) முதல் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story