கூடலூர் அருகே 125 கிலோ தங்கத்தூள் கலந்த மண் பறிமுதல் மில்லுக்கு ‘சீல்’; பெண் உள்பட 2 பேர் கைது


கூடலூர் அருகே 125 கிலோ தங்கத்தூள் கலந்த மண் பறிமுதல் மில்லுக்கு ‘சீல்’; பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2020 10:55 PM GMT (Updated: 5 May 2020 10:55 PM GMT)

கூடலூர் அருகே 125 கிலோ தங்கத்தூள் கலந்த மண் பறிமுதல் செய்யப் பட்டு, சம்பந்தப்பட்ட மில்லுக்கு ‘சீல்’ வைக்கப் பட்டது. மேலும் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் ஆங்கிலேயர் கால தங்க சுரங்கம் உள்ளது. இது வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனத்தில் தங்க சுரங்கம் உள்ளது. எனவே அங்கு செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது. ஆனாலும் தேவாலா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர் தடையை மீறி சுரங்கம் உள்ள பகுதிக்கு சென்று மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை பயன்படுத்தி பலரும் வனத்துக்குள் தடையை மீறி நுழைந்து தங்க சுரங்கம் உள்ள பகுதியில் மண், கற்களை வெட்டி எடுத்து கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் தேவாலா பகுதியில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷெரீப் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனை

அப்போது, வனத்தில் தங்க சுரங்கம் உள்ள பகுதியில் வெட்டி எடுத்த மண், கற்களை தேவாலா பஜாரில் உள்ள ஒரு மாவு அரைக்கும் மில்லில் கொடுப்பது தெரியவந்தது. இதையடுத்து தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று அந்த மில்லில் சோதனை நடத் தினர்.

இதில், சுரங்கம் உள்ள பகுதியில் வெட்டி எடுத்த மண், கற்களை அரைத்து, சலித்து தங்க துகள்களை எடுப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மில் ஊழியர் அயூப் (வயது 43) கைது செய்யப்பட்டார்.

மில்லுக்கு ‘சீல்’

இதேபோன்று தேவாலா அட்டியில் உள்ள ஒரு மில்லிலும் தங்க சுரங்கம் உள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மண், கற்களை அரைப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆர்.டி.ஓ. ராஜ்குமார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். இதில், கற்களை அரைத்து, சலித்து 125 கிலோ தங்கத்தூள் கலந்த மண் மூட்டைகளில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மில்லுக்கு ‘சீல்’ வைக்கப் பட்டது. இது தொடர்பாக சுருளியம்மா(48) என்பவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த தங்கத்தூள் கலந்த மண் பறிமுதல் செய்யப் பட்டது.

இது குறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, தங்க சுரங்கம் உள்ள பகுதியில் இருந்து எடுத்து வந்த கற்களை அரைத்து, மண்ணில் உள்ள தங்கத்தூளை பாதரசம் கொண்டு பிரித்தெடுக்கின் றனர். பின்ன அந்த தங்கத்தை விற்பனை செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட தங்க சுரங்கத்துக்குள் சென்று, கற்களை வெட்டி எடுக்கக் கூடாது. இதை மீறி செயல் படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story