சீர்காழி பகுதியில் மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு களைவெட்டும் பணி தீவிரம்


சீர்காழி பகுதியில் மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு களைவெட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 May 2020 4:46 AM IST (Updated: 6 May 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு களை வெட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

திருவெண்காடு, 

சீர்காழி பகுதியில் மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு களை வெட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மரவள்ளி கிழங்கு

நம்முடைய உணவு தேவையில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் வகிக்கிறது. சேமியா, ஜவ்வரிசி உள்ளிட்டவைகளை தயாரிக்க மரவள்ளி கிழங்கு தான் மூலப்பொருட்களாக விளங்குகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் சிப்ஸ் மிகவும் சுவையானதாக இருக்கும். குறிப்பாக கேரளா மாநிலத்தில் அன்றாடம் உணவில் முக்கிய இடத்தை பிடிக்கும் உணவாக மரவள்ளி கிழங்கு விளங்குகிறது.

இதில் அதிகளவில் சத்துக்கள், பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் கால்நடைகளுக்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மரவள்ளி கிழங்கு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

களை வெட்டும் பணி

இந்தநிலையில் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட மங்கைமடம், எம்பாவை, ராதாநல்லூர், இளையமதுகூடம், செம்பதனிருப்பு, மாதானம், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், சாகுபடி செய்த மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு களைவெட்டும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து எம்பாவை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறியதாவது:-

மரவள்ளி கிழங்கு சுமார் 10 மாதங்களில் விளைச்சல் தர கூடியதாகும். நிலக்கடலை பயிரிடும் மார்கழி மாதத்திலேயே மரவள்ளி கிழங்கை ஊடு பயிராக நடவு செய்து விடுவோம். தற்போது நிலக்கடலை அறுவடை முடிந்தவுடன், மரவள்ளி கிழங்கு செடிக்கு களை வெட்டும் பணிகளை தொடங்கி உள்ளோம். மேலும் இந்த பணிகள் முடிந்தவுடன் கிழங்கு செடிகளின் கீழ் பகுதியில் உரங்களை இட்டு தண்ணீர் பாய்ச்சுவோம்.

மேலும் மாதத்தில் 2 முறை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆடி மாதத்தில் இரண்டாவது முறையாக களைவெட்டி செடிகளுக்கு மண் அணைப்போம். புரட்டாசி மாதத்தில் கிழங்கு அறுவடைக்கு தயாராகிவிடும். மரவள்ளி கிழங்கு முறையாக சாகுபடி செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story