திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவி, பெண் போலீஸ் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவி, பெண் போலீஸ் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 May 2020 4:55 AM IST (Updated: 6 May 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவி, பெண் போலீஸ் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், ராஜஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 1-ந்தேதி வரை மொத்தம் 81 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையே சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து பலர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து திரும்பிய 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது.

மேலும் 7 பேருக்கு தொற்று

இந்த நிலையில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் 3 பெண்கள் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியும் ஒருவர். இவர், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

கடந்த மாதம் இறுதியில் இவர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

பெண் போலீஸ்

இதேபோல் சித்தையன்கோட்டையை அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்த பெண், சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றுகிறார். இவர் தனது தோழியுடன் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுதவிர ஒட்டுப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளான தொழிலாளியின் மனைவி ஆவார். கணவர் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

98 ஆக உயர்வு

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு ஊருக்கு திரும்பிய சேவுகம்பட்டி, சிங்காரகோட்டை மற்றும் சின்னாளப்பட்டியை அடுத்த கதிரிபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த 3 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒட்டன்சத்திரம் வினோபாநகரை சேர்ந்த லாரி கிளனரையும் கொரோனா பாதித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரியில் காய்கறிகளை கொண்டு சென்ற போது அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆக உயர்ந்தது. இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் புதிதாக 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் 15 பேர் கோயம்பேடு மார்க்கெட்டால் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story