கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிய தாவது:-
“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஜூன் மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இன்னும் 20 நாட்களுக்கு பிறகு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதற்குள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். தேர்வு நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்பட்டால், தேர்வு கால அட்டவணையை அறிவிப்போம். இந்த அட்டவணையை நானே சமூக வலைத்தளத்தில் அறிவிப்பேன்.
மாணவர்களுக்கு வகுப்புகள்
தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்வு தொடங்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் மனரீதியாக தயாராகி விடுவார்கள். மேலும் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தேர்வு அறிவித்தால் அவர்கள் மீண்டும் படித்த கல்வி நிலையங்களுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.
இதை தடுக்க அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் சாதக-பாதகங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். சந்தனா அரசு தொலைக்காட்சியில் 10-ம் வகுப்பு கன்னட வழியில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில வழி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.”
இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story