மயிலாடுதுறையில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது சமுதாய தொற்று ஏற்படுமோ? என அச்சம்


மயிலாடுதுறையில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது சமுதாய தொற்று ஏற்படுமோ? என அச்சம்
x
தினத்தந்தி 6 May 2020 5:35 AM IST (Updated: 6 May 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் சமுதாய தொற்று ஏற்படுமோ? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குத்தாலம், 

மயிலாடுதுறையில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் சமுதாய தொற்று ஏற்படுமோ? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள்

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால் நாகை மாவட்டத்தை பொறுத்தவரை தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள், சலூன் கடைகள், இன்னும் சில வர்த்தக நிறுவனங்களை தவிர்த்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க திரண்டனர்.

2-வது நாளாக...

2-வது நாளான நேற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கிய கடைவீதிகளான பட்டமங்கலத்தெரு, பெரியக்கடைத்தெரு, காந்திஜிரோடு, பழைய ஸ்டேட் பாங்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தெருக்களின் எல்லையில் சாலையின் குறுக்கே கயிறுகளை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மயிலாடுதுறை கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, தரங்கம்பாடி சாலை, கும்பகோணம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.

இந்த சாலைகளில் அதிகமாக வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சமூக விலகலை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் திரண்டனர். தமிழகத்தில் நாளுக்கு, நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் சமுதாய தொற்று ஏற்படுமோ? என சமூக ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story