பெண்களிடம் பணம் பறித்த விவகாரம்: நெருங்கிய 2 நண்பர்களிடம் தகவலை பகிர்ந்த காசி போலீஸ் விசாரணையில் தகவல்


பெண்களிடம் பணம் பறித்த விவகாரம்: நெருங்கிய 2 நண்பர்களிடம் தகவலை பகிர்ந்த காசி போலீஸ் விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 6 May 2020 12:25 AM GMT (Updated: 2020-05-06T05:55:34+05:30)

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விவகாரத்தில் வாலிபரின் நெருங்கிய நண்பர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாகர்கோவில், 

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விவகாரத்தில் வாலிபரின் நெருங்கிய நண்பர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாலிபர் கைது

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் நெருங்கி பழகி, அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி பலமுறை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் டாக்டர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். பின்னர் போலீசார் காசி மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். காசியின் செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், பல பெண்களிடம் அவர் நெருக்கமாக இருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே, நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயரும், காசி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், தன்னிடம் நெருங்கி பழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி நகை, பணம் பறித்ததாக கூறியிருந்தார். மேலும், கந்து வட்டி புகாரின் மீதும் காசி மீது வழக்கு தொடரப்பட்டது.

போலீஸ் காவலில் விசாரணை

காசி மீது தொடர்ந்து பரபரப்பு குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து போலீசார், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். காசியால் எத்தனை பெண்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என்ற விவரங்கள் அறிய அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காசியை நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மகிளா குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, காசியை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி ஆனந்த், 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

2 நண்பர்களுக்கு தொடர்பு

இதை தொடர்ந்து காசியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையை தொடங்கிய போது, முதலில் காசி சரிவர ஒத்துழைக்காமல் பதில் கூறாமல் இருந்து உள்ளார். மேலும் போலீசாரின் கேள்விகளுக்கு மவுனம் காக்க தொடங்கினார். இந்த நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சமூக வலைதளம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் அதிக சம்பளத்துடன் வேலை பார்க்கும் பெண்கள் என 15 பேரை குறிவைத்து நெருக்கமாக பழகி உள்ளார். பின்னர் அவர்களிடம் தினமும் நேரம் தவறாமல் வீடியோ கால் செய்து, அதனை தனது செல்போனில் “ஸ்கிரீன் ரெக்கார்டர்“ மூலம் பதிவு செய்துள்ளார். அதனை வைத்து பெண்களை மிரட்டி பலமுறை பணம் பறித்து உள்ளார்.

மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் போது நண்பர்கள் யாரையும் கூட்டு சேர்க்காமல் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் காசிக்கு நெருங்கிய நண்பர்கள் 2 பேரிடம் மட்டும் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காசியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Next Story