ஊரடங்கில் தளர்வு: குமரியில் குறைந்த தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கிய செங்கல்சூளைகள்


ஊரடங்கில் தளர்வு: குமரியில் குறைந்த தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கிய செங்கல்சூளைகள்
x
தினத்தந்தி 6 May 2020 12:38 AM GMT (Updated: 6 May 2020 12:38 AM GMT)

குமரியில் குறைந்த தொழிலாளர்களுடன் செங்கல்சூளைகள் இயங்க தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆரல்வாய்மொழி,

குமரியில் குறைந்த தொழிலாளர்களுடன் செங்கல்சூளைகள் இயங்க தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கல்சூளைகள்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கின. 40 நாட்களாக தொழில் நடைபெறாததால் தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்தனர். மேலும் உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கில் சிலவற்றை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தி வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படவில்லை. சில இடங்களில் மாவட்ட நிர்வாகம் படிப்படியாக தளர்வுகளை செயல்படுத்தி வருகிறது. அதில், குமரி மாவட்டமும் ஒன்று.

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறிய பிறகும், குமரி மாவட்டத்தில் தனிக்கடைகளை உடனடியாக திறக்க அனுமதி அளிக்கவில்லை. வருகிற 9-ந் தேதி முதல் திறக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், செங்கல் சூளைகள் செயல்பட அனுமதி அளித்திருந்தது.

மீண்டும் இயங்க தொடங்கியது

அதன்படி நேற்று முதல் மீண்டும் செங்கல்சூளைகள் இயங்க தொடங்கியது. குறைந்த தொழிலாளர்கள் மூலம் பணி நடந்தது. மேலும், முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி தொழிலாளர்கள் பணிபுரிய உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் பாதி செங்கல்சூளைகள் செயல்பட தொடங்கியதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜேக்கப் மனோகரன் கூறுகையில், 41 நாட்களுக்கு பிறகு செங்கல் சூளை செயல்பட தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா ஊரடங்கால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், தொழிலாளர்களும் வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சுடப்பட்ட செங்கல்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தோம். இதனால் பணப்புழக்கமின்றி அவதிப்பட்டோம்.

வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ததோடு, நாங்களும் உதவி செய்தோம். தற்போது, செங்கல்சூளைகள் 60 சதவீதம் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது. மண் தட்டுப்பாடு, விறகு போன்றவை இல்லாததால் இந்த பணிகளை தொடங்குவதில் சிரமம் உள்ளது. ஏற்கனவே தயாராக வைத்திருந்த செங்கல்சூளை உரிமையாளர்கள் மட்டும் பணியை தொடங்கி உள்ளனர். செங்கல்சூளைகள் மீண்டும் செயல்படுவதால், எங்களுக்கு பணப் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், அரசு உத்தரவுபடி சமூக இடைவெளியை பின்பற்றியும், தொழிலாளர்கள் முக கவசம் அணிந்தபடியும் பணி நடந்து வருகிறது என்றார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அரசின் உத்தரவுபடி செங்கல்சூளைகள் செயல்பட வேண்டும். கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காவிட்டால் அந்த செங்கல்சூளைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படும் என்றனர்.

Next Story