ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு: வெளி மாவட்டத்தில் இருந்து வந்த 400 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. வெளி மாவட்டத்தில் இருந்து குமரிக்கு வந்த 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. வெளி மாவட்டத்தில் இருந்து குமரிக்கு வந்த 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தடை விலக்கப்படவில்லை
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிகட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இன்னும் தொடர்ந்து சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு விதிக்கப்பட்ட தடை இதுவரை விலக்கப்படவில்லை.
அதே சமயத்தில், சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற குமரி நர்சுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவருடன் சென்ற கணவர், டிரைவர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. இதனால் அந்த நர்சுக்கு சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொரோனா பரவ வாய்ப்பு
எனினும், குமரி மாவட்ட கொரோனா தொற்று பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. இதனால், நர்சு தங்கியிருந்த செறுதிகோணம் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. தற்போது மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால் கொரோனாவின் வீரியம் குறைந்ததால், குமரி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது. மேலும், கொரோனா இல்லாத பசுமை மண்டலமாக மாற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 3-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து சொந்த ஊரான குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா ருத்ரதாண்டவமாடி வருவதால், அங்கிருந்து வரும் மக்கள் மூலம் குமரியில் கொரோனா பரவ வாய்ப்பு என அஞ்சப்படுகிறது.
சளி மாதிரி சேகரிப்பு
இதனால் குமரி மாவட்டத்திற்கு வரும் நபர்களை கண்காணிக்கும் பணி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிரமாக நடக்கிறது. மேலும், அதன் அருகில் உள்ள அண்ணா கல்லூரியில் சளி மாதிரி சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு அவர்களை அழைத்து சென்று சளி மாதிரி சேகரித்த பிறகு தான், குமரி மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், 14 நாட்கள் வீட்டில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் அண்ணா கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில், 400 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் 2 நாளில் வெளிவர வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, தாசில்தார் ராஜேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி ஆகியோர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சளி மாதிரி சேகரிக்கும் மையத்தை ஆய்வு செய்தனர்.
தனிமையில் இருக்கிறார்களா?
இதற்கிடையே, வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் தனிமையில் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் யாரேனும் வெளியே சுற்றினால், அருகில் வசிப்பவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story