போலீசார் எச்சரிக்கையையும் மீறி குமரியில் கடைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு
போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி குமரியில் கடைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி குமரியில் கடைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு தளர்வு
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3-ந் தேதிக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த தளர்வுகளை மாவட்டத்திற்கு ஏற்றாற்போல கலெக்டர் மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில தொழில்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தனிக்கடைகளை உடனடியாக திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 9-ந் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கடைகள் திறப்பு
இதனை அறியாமல் நேற்று முன்தினம் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து சில மணி நேரங்களில் மீண்டும் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி குமரி மாவட்டத்தில் மீண்டும் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டீக்கடைகள் முதல் பேன்சி கடைகளும் செயல்பட்டன. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதோ என்று நினைக்க தோன்றியது. நாகர்கோவிலை பொருத்த வரையில் இந்து கல்லூரி ரோடு, கோட்டார், வடசேரி, வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதோடு வாகனங்களிலும் பொதுமக்கள் தாராளமாக வலம் வரத் தொடங்கியதை காணமுடிந்தது.
நிதி நிறுவனங்கள்
இதை தொடர்ந்து அந்த கடைகளை மூடும்படி போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். மேலும் அத்தியாவசிய கடைகளை மதியம் 1 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவித்தனர். இதற்கிடையே அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட கடைகளை பலர் மூடினர். ஆனால், ஒரு சிலர் தொடர்ந்து கடைகளை இயக்கியதை பார்க்க முடிந்தது. இதேபோல ஒரு சில நிதி நிறுவனங்களும் திறக்கப்பட்டு இருந்தன. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் திறக்கப்பட்டு இருந்த ஒரு நிதி நிறுவனத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டாட்சியர் மயில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை மூடும்படி கூறினார். இதனையடுத்து அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது.
Related Tags :
Next Story