நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி? கலெக்டர் ஷில்பா விளக்கம்


நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி? கலெக்டர் ஷில்பா விளக்கம்
x
தினத்தந்தி 6 May 2020 3:00 AM GMT (Updated: 6 May 2020 2:23 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது என்பது குறித்து கலெக்டர் ஷில்பா விளக்கம் அளித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது என்பது குறித்து கலெக்டர் ஷில்பா விளக்கம் அளித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு மற்றும் 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். இதில் அனைத்து வணிக சங்கத்தினர், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

திறக்கக்கூடாது

பெரிய வணிக வளாகங்கள், பல்பொருள் அச்சு பொருட்கள், டீக்கடை, சலூன், அழகு நிலையம், மசாஜ் சென்டர், 4 சக்கர, 2 சக்கர வாகன விற்பனை நிலையங்கள், நகைக்கடைகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஜவுளி கடைகள், டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா, அடுக்குமாடி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறக்கக்கூடாது. பெரிய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நகர் பகுதிகளில் கட்டுமான பணிகள் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்கள் ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். தினசரி அழைத்து வர அனுமதி இல்லை. ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், உணவகங்கள், ஏ.டி.எம். மையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை தங்கு தடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

வழிபாட்டு தலங்கள்

வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், தியேட்டர்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்டரங்குகள் போன்ற இடங்கள், அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நடைமுறைப்படி இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கான ரெயில், பொது பஸ் போக்குவரத்து, டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா, மெட்ரோ ரெயில், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான பொதுமக்கள் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடு உள்ளது. இறுதி ஊர்வலம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள ஊரடங்கு நடைமுறைகள் தொடரும்.

சமூக இடைவெளி

வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. இணைய வழியில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்ற பின்னர்தான் செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் மட்டும் தலைக்கவசம், முககவசம் அணிந்து செல்ல வேண்டும். 4 சக்கர வாகனங்களில் டிரைவர் உள்பட 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்த கடைகளில் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிருமி நாசினி திரவம் வைக்க வேண்டும். இதை மீறி இயங்கும் நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து ‘சீல்‘ வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணிஷ் நாரணவரே (நெல்லை), பிரதீப் தயாள் (சேரன்மாதேவி), நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story