34 நாட்களுக்கு பிறகு திருபுவனை, முத்தியால்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு


34 நாட்களுக்கு பிறகு திருபுவனை, முத்தியால்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு
x
தினத்தந்தி 6 May 2020 8:10 AM IST (Updated: 6 May 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

34 நாட்களுக்கு பிறகு திருபுவனை மற்றும் முத்தியால்பேட்டை பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த நபர் ஒருவர் திருக்கனூர் பகுதிக்கு வந்து சென்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொரோனா பீதியில் திருக்கனூர் புதுநகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகள் கடந்த மாதம் 1-ந் தேதி சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. இங்கிருந்து வெளியே செல்லவும், வெளியாட்கள் இங்கே வரவும் தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல் முத்தியால்பேட்டை பகுதியும் கொரோனா பீதியால் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருக்கனூர், முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த 3-ந் தேதிக்கு பிறகு சீல் அகற்றப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி திருபுவனை, முத்தியால்பேட்டை பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

மக்கள் மகிழ்ச்சி

திருபுவனையில் டி.பி.ஆர்.செல்வம், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப், தாசில்தார் அருணையா ஆகியோர் கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் இருந்த தடுப்பு வேலிகளை அகற்றினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார நிலைய மருத்துவர் பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த 34 நாட்களாக வீட்டுக்குள்ளே முடங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

3,281 பேருக்கு பரிசோதனை

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று சுகாதார ஊழியர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். 3 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்த முத்தியால்பேட்டை, திருக்கனூர் பகுதிகளுக்கு தற்போது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் இருந்து சிறு சிறு காரணங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். அவர் களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக வந்தால் கூட அவசர சிகிச்சைக்காக வருபவர்களை மட்டுமே அனுமதிக்க கூறி உள்ளோம்.

கொரோனா தொற்று இல்லை

புதுவையில் மதுக்கடைகள் திறக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பக்கத்து மாநிலங் களில் இதற்கான அறிவிப்புகள் வந்துள்ளன. இது தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார். கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது. புதுவையிலும் கோயம்பேடு வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 157 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று அறிக்கை வந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.


Next Story