திருச்சியில் கொரோனா பயமின்றி வாகனங்களில் உலா வந்த பொதுமக்கள் சமூக இடைவெளி துளியும் இல்லை; போலீசாரும் கண்டுகொள்ளவில்லை


திருச்சியில் கொரோனா பயமின்றி வாகனங்களில் உலா வந்த பொதுமக்கள் சமூக இடைவெளி துளியும் இல்லை; போலீசாரும் கண்டுகொள்ளவில்லை
x
தினத்தந்தி 6 May 2020 3:15 AM GMT (Updated: 6 May 2020 3:15 AM GMT)

திருச்சி மாநகரில் கொரோனா பயமின்றி 2-வது நாளாக வாகனங்களில் பொதுமக்கள் உலா வந்தனர். சமூக விலகல் துளியும் இல்லாமல் வந்தவர்களை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.

திருச்சி, 

திருச்சி மாநகரில் கொரோனா பயமின்றி 2-வது நாளாக வாகனங்களில் பொதுமக்கள் உலா வந்தனர். சமூக விலகல் துளியும் இல்லாமல் வந்தவர்களை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.

ஊரடங்கு இன்று முதல் தளர்வு

திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல்தான் ஊரடங்கில் இருந்து சிறிது தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், ஊரகப்பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் அனைத்து கடைகளும் செயல்படலாம் என்றும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுபோல வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், டீ கடைகள், சலூன்கள், அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், நகைக்கடை, குளிர்பதன வசதிகொண்ட ஜவுளி கடைகள் திறப்பதற்கும், ஆட்டோக்கள் இயக்குவதற்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல பஸ், ரெயில், ஆட்டோக்கள் இயங்க தடை நீடிக்கிறது.

படையெடுத்த மக்கள்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருச்சி மாநகரில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று 2-வது நாளாக கொரோனா அச்சம் சிறிதும் இன்றி திருச்சி மாநகரில் பொதுமக்கள் படையெடுத்தபடி மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி, ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் கெடுபிடி தளர்ந்ததால் வாகனங்கள் ஓட்டமும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்தது.

அங்கு சமூக இடைவெளி துளியும் இல்லாமல் இருந்தது. இதுவரை கொரோனாவுக்காக வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், அடங்க மறுத்து வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதுபோல காணப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள வெல்லமண்டி பகுதி, பெரிய கடை வீதி, மைலம் சந்தை, பாலக்கரை, மேலப்புதூர், சத்திரம் பஸ் நிலையப்பகுதி, தில்லை நகர், எடத்தெரு, உறையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த வியாபார மளிகைக்கடைகள், அரிசிக்கடைகள், ஆயில் கடைகள் உள்ளிட்டவைகளில் சரக்கு வாங்க 2-வது நாளான நேற்றும் சாலைகளில் நாலாபுறங்களில் இருந்தும் இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் என சாரை, சாரையாக வந்து கொண்டே இருந்தது. போலீசாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

காற்றில் பறந்த உத்தரவு

இதுபோல ஜி கார்னர் திடலில் அமைந்துள்ள மொத்த வியாபார கேந்திரமான மார்க்கெட்டிலும் நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து அங்கு சமூக விலகலும் இல்லை. பெரும்பாலான வியாபாரிகள் முக கவசங்கள் அணியவும் இல்லை. 40 நாட்களுக்கு மேலாகியும் கண்ணுக்கு தெரியாத கொரோனாவின் கொடூர தாண்டவம் குறித்து மக்கள் இன்னமும் உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. குறிப்பாக மாவட்ட கலெக்டரின் உத்தரவை பொதுமக்கள் காற்றில் பறக்கவிட்டனர் என்றேதான் சொல்ல வேண்டும்.

Next Story