வேலூர் மாவட்டத்தில் கீரை வியாபாரிகள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு


வேலூர் மாவட்டத்தில் கீரை வியாபாரிகள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு
x

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கீரை விற்க சென்று வந்த 2 வியாபாரிகள், வேலூருக்கு சிகிச்சைக்கு வந்த வங்காளதேச மூதாட்டி ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

வேலூர்,

காட்பாடி அருகே உள்ள 66 புதூர் கிராமத்தை சேர்ந்த வியாபாரிகள் சிலர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று நேற்று முன்தினம் வீடு திரும்பியதாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், 10 பேர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கீரை, காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களின் சளிமாதிரி சேகரிப்பட்டன. அவற்றின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், கீரை வியாபாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்றிரவு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து கீரை வியாபாரிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், அவருடன் சென்னை சென்று திரும்பிய வியாபாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வங்காளதேச மூதாட்டி

வங்காளதேசத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வேலூருக்கு வந்திருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பாபுராவ் தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அந்த மூதாட்டிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதையடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதியில் தங்கியிருந்த 47 பேரும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி 3 பேருக்கு கொரோனா தொற்று காணப்பட்டது. அதையடுத்து 17 நாட்கள் கொரோனா அறிகுறி யாருக்கும் காணப்படவில்லை. தற்போது ஒரே நாளில் வங்காளதேச மூதாட்டி, கீரை வியாபாரிகள் 2 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.


Next Story