கடைவீதிகளில் மக்கள் கூட்டம்: சமூக இடைவெளியை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள் வர்த்தக சங்கத்தினருடன் அதிகாரி ஆலோசனை


கடைவீதிகளில் மக்கள் கூட்டம்: சமூக இடைவெளியை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள் வர்த்தக சங்கத்தினருடன் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 6 May 2020 10:46 AM IST (Updated: 6 May 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கலெக்டர் உமாமகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை, 

கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கலெக்டர் உமாமகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார். வியாபாரிகளுடன் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

மக்கள் கூட்டம்

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் கடைவீதிகளில் நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியது. இதேபோல நேற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் திறந்த நிலையில் பொருட்கள் வாங்க பலர் வந்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை சிலர் கடைபிடிக்கவில்லை.

இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், 1 மீட்டர் சமூக இடைவெளியும் பின்பற்ற வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள குடையுடன் வருமாறு கலெக்டர் உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

வியாபாரிகள்

இதற்கிடையில் கடைவீதிகளில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார். மேலும் வர்த்தக சங்கத்தினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். அரசு விதித்துள்ள நடைமுறைகளின் படி கடைகளில் வியாபாரிகள், ஊழியர்கள் அனைவரும் முக கவசம், கையுறை அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தொற்று ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

இதேபோல் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்காணிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story